ஞாயிறு, 19 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (11) பண்டு முளைப்பது அரிசியே !

விண்டு உமி போனால் முளையாது !

 ----------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு வாக்குண்டாம்என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (11)

-----------------------------------------------------------------------------------------

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்

விண்டுமி போனால் முளையாதாம் கொண்டபேர்

ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி

ஏற்ற கருமஞ் செயல் !

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------------------------------------------------------

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமி போனால் முளையாது கொண்ட பேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி

ஏற்ற கருமம் செயல் !

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------

பண்டு முளைப்பது = (உமி நீங்குதற்கு) முன்னே முளைப்பது ; அரிசியே ஆனாலும் = அரிசியே யாயினும் ; உமி விண்டு போனால் = உமி நீங்கிப் போனால் ; முளையாது = (அவ்வரிசி முளைக்காது ; (அதுபோல) கொண்ட = பெற்ற ; பேர் ஆற்றல் உடையார்க்கும் = பெரிய வல்லமை உடையவருக்கும் ; அளவு இன்றி = துணை வலி இல்லாமல் ; ஏற்ற கருமம் = எடுத்துக் கொண்ட காரியத்தை ; செயல் ஆகாது = செய்து முடித்தல் இயலாது.

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------------

தன்னைச் சுற்றி மூடியிருக்கும் உமி நீங்குவதற்கு முன்பாகவே அரிசியிலிருந்து முளை அரும்பிவிடுகிறது; இருந்தாலும் அந்த உமி நீங்கிவிட்டால் அரிசி ஒருபோதும் முளைவிட முடியாது ! அதைப்போல அனைத்து வல்லமையும் படைத்த மனிதனாக இருந்தாலும்கூட, தான் தொடங்கிய செயலை முடிப்பதற்கு  துணைவர்களின் வலிமை கண்டிப்பாகத் தேவை ! துணைவலி இல்லாமல் எந்தச் செயலையும் யாரும் முடித்திட முடியாது !

----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------------

மிக்க வல்லமை உடையவர்க்கும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க, துணை வலி வேண்டும் !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 04]

{19-12-2021}

--------------------------------------------------------------------------------------

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (12) மடல் பெரிது தாழை !

 தாழை மடல் பெரியது மகிழம்பூ சிறியது  !

------------------------------------------------------------------------------------------

மூதுரையில் வரும் பாடல்கள் நான்கு அடிகளால் ஆனவை. அடியளவில் சிறியவையானாலும் அவை நமக்கு எடுத்து உரைக்கும் நீதிக் கருத்துகள்  மதிப்பளவில் பெரியவை. ஔவையாரின்  அருட்கொடை இந்நூல். அதிலிருந்து ஒரு பாடல்!

-----------------------------------------------------------------------------------------

பாடல்.12.

-----------------------------------------------------------------------------------------

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா கடல்பெரிது

மண்ணீரு மாகா ததனருகே சிற்றூரல்

உண்ணீரு மாகி விடும்.

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்;

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா கடல் பெரிது

மண் நீரும் ஆகாது அதனருகே சிற்றூரல்

உண்ணீரும் ஆகி விடும்.

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------

தாழை மடல் பெரிது = தாழம் பூ இதழ்களினாலே பெரிதாக இருக்கின்றது ;மகிழ் கந்தம் இனிது = மகிழம் பூ (இதழ்களினாலே சிறிதாக இருந்தாலும்) மணத்தினாலே (தாழம் பூவினும்)  பெரிதாக இருக்கின்றது ; கடல் பெரிது = ஆழிப் பெருங்கடலானது வடிவில் பெரிதாக இருக்கின்றது; மண் = (ஆயினும்) உடம்பின் அழுக்கைக் கழுவுவதற்குக் கூட  (மண்ணுதல் = கழுவுதல்) ; நீரும் ஆகாது = உகந்த நீரும் ஆகாது ; அதனருகே = அப் பெரிய கடலின் அருகே ; சிற்றூரல் = (தோண்டப் பெறும்) சிறிய மணற் குழியில் சுரக்கும் ஊற்று நீர் ; உண் நீரும் ஆகும் = குடிக்கத் தக்க நீரும் ஆகும் ; (ஆதலினால்) உடல் சிறியர் என்று இருக்க வேண்டா =  உருவத்தினாலே சிறியவர் என்று மதியாமல் இருக்க வேண்டாம்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

--------------------------

தாழம் பூ உருவத்தில் பெரியதாக  இருந்தாலும், அதன் மணம், (சிலருக்குப் பிடித்தாலும்) இனியது என்று பெரும்பாலோர் சொல்வதில்லை. ஆனால் மகிழம் பூ உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இனிய நறுமணத்தில்  தாழம் பூவை விடப் பெரியது. அதுபோல், கடலானது வடிவத்தில் மிகப் பெரியது என்றாலும், அதன் நீரானது அழுக்கு உடம்பைக் கழுவுவதற்குக் கூடப் பயன் படுவதில்லை. ஆனால், அதன் பக்கத்தில் தோண்டப்படும் சிறிய மணற் குழியில் சுரக்கும் ஊற்று நீரானது, அழுக்கு தீரக் குளிப்பதற்கு மட்டுமின்றிக் குடிப்பதற்கும் கூடப் பயன்படுகிறது. ஆதலால், ஒருவரை உருவத்தினாலே சிறியவர் என்று மதிப்புத் தராமல் புறந் தள்ளக் கூடாது !

----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------

உருவத்தால் பெரியவர், குணத்தால் சிறியராக இருப்பதுண்டு; உருவத்தால் சிறியவர் குணத்தால் பெரியராக இருப்பதும் உண்டு. ஆகையால், தோற்றத்தை வைத்து யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது !

-----------------------------------------------------------------------------------------

கலைச் சொற்கள்

உண்ணீர் = DRINKING WATER ;

மண்ணீர் = WATER USED FOR OTHER PURPOSES.

( சென்னை மக்கள் மொழியில் உப்புத் தண்ணீர்”)

சிற்றூரல் = SPRING

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052, சிலை (மார்கழி),04]

{19-12-2021}

-----------------------------------------------------------------------------------------

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (13) கவையாகி கொம்பாகி !

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்  !

------------------------------------------------------------------------------------------

பாடத் திட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றத்தினால் நல்வழி, நன்னெறி, மூதுரை, திருவருட்பா போன்ற நீதி நெறி வழிகாட்டும் நூல்களிலிருந்து பாடல்களைப் படிக்கும் வாய்ப்பினை மாணவர்கள்  இழந்து விட்டனர். எனவே, இளைய தலைமுறைக்குப் பயன்படும் வகையில் மூதுரையிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல்.13.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் சவைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டா தவன்நன் மரம்.

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

கவையாகிக் கொம்பாகிக் காட்டு அகத்தே நிற்கும்

அவை அல்ல நல்ல மரங்கள் - சவை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நன் மரம்.

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

கவையாகி = கவை போன்ற கிளைகளையும்; கொம்பாகி = நீண்ட குச்சிகளையும் உடையதாகி ; காட்டகத்தே = காட்டில் ; நிற்கும் = வளர்ந்து நிற்கும் ; அவை = அந்த மரங்கள் ; நல்ல மரங்கள் அல்ல = நல்ல மரங்கள் ஆகா; சவை நடுவே = கற்றோர் நிறைந்த அரங்கத்தில் ;நீட்டு ஓலை = (ஒருவர்) நீட்டிய ஓலையை ; வாசியா நின்றான் = வாசிக்க மாட்டாமல் நின்றவனும் ; குறிப்பு அறிய மாட்டாதவன் = பிறர் முகக் குறிப்பை அறிந்து செயல்படாதவனுமே ; நன் மரம் = நல்ல மரங்களாம்.

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

கவை போன்ற கிளைகளையும், நீண்டு வளர்ந்ததிருக்கும் போத்துகளையும் (தடித்த நீண்ட குச்சி) உடையதாகி, காட்டில் செழித்து வளர்ந்திருக்கும் மரங்கள் எல்லாம் நல்ல மரங்கள் அல்ல. கற்றோர் நிறைந்த அரங்கத்தில், ஒருவர் தருகின்ற  ஓலைச் சுவடியைப் படித்துப் பார்த்து  அதில் உள்ள கருத்துகளை எடுத்துரைக்க வல்லமை இன்றி, வெளிறிய முகத்துடன் நிற்பவனும், மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அவர்களது முகக் குறிப்பைப் பார்த்துச் செயல்படாதவனுமே காட்டில் உள்ள மரங்களை விட மேலான  மரங்களாகும் !

----------------------------------------------------------------------------------------

சுருக்க விளக்கம்:

----------------------------

ஆறு அறிவுடைய மனித குலத்தில்  பிறந்து இருந்தாலும், கல்வி இல்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஓரறிவுடைய மரத்தினும் கடையர் ஆவார் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052, சிலை (மார்கழி),04]

{19-12-2021}

-----------------------------------------------------------------------------------------

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (14) கான மயிலாடக் கண்டிருந்த !

மயிலைப் பார்த்து வான்கோழியும் ஆட முயன்றதாம் !

------------------------------------------------------------------------------------------

கானகத்தில்  தனது அழகிய தோகையை விரித்து ஆடிய மயிலைப் பார்த்து வான்கோழியும் தனது அருவருப்பான சிறகை விரித்து ஆட முயன்றதாம். இந்தக் காட்சியை உவமையாக்கி தனது மூதுரையில் ஒரு பாடலைப் படைத்திருக்கிறார் ஔவையார். இதோ அந்தப் பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல்.14.

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி !

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் தானும் தன்

பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

கானம் = காடு ; தானும் அதுவாகப் பாவித்து = தன்னையும் மயில் போல நினைத்துக் கொண்டு ; தானும் = அதுவும் ; தன் பொல்லாச் சிறகை = தன் அழகில்லாத சிறகை ; கல்லாதான் = கற்க வேண்டியவைகளை முறைப்படிக் கல்லாதவன் ; கற்ற கவி = (கற்றோர் கூறுவதைச்  கேட்டு) ஒரு கவியைக் கற்றுக் கொண்டு சொல்லுதல்.

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------

கற்க வேண்டிய கல்வியை முறைப்படிக் கல்லாத ஒரு மனிதன்வேறு ஒருவர் எழுதிய கவிதையை மனப்பாடம் செய்துகொண்டு வந்து மற்றவர்களிடம் சொல்லிக் காட்டுதல் என்பது காட்டிலுள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்து ஆடுகையில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த  வான்கோழியானது, தன்னையும் அம் மயிலாகவே நினைத்துக் கொண்டு தானும் தன் அழகில்லாத சிறகை விரித்து ஆடுவதைப் போன்றதாகும் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------

கல்லாதவன் கற்றவனைப் போல் நடித்தாலும் கற்றவன் ஆக மாட்டான் !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052, சிலை(மார்கழி),04]

{19-12-20121}

-----------------------------------------------------------------------------------------

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (15) வேங்கை வரிப்புலி நோய் !

 வேங்கைப்புலியின் நோய் தீர்த்த மருத்துவன் ! 

-----------------------------------------------------------------------------------------

நோய்வாய்ப்பட்ட புலியொன்றை மருத்துவம் பார்த்துப் பிழைக்க வைத்த மருத்துவனை, அப்புலியே அடித்துக் கொன்று உண்டுவிட்டதாம். இந்தக் காட்சியை உவமையாக்கி, தீயவருக்கு உதவி செய்யாதீர் என்று நம்மை எச்சரிக்கும் ஔவையார்  தனது மூதுரையில்  படைத்திருக்கும் பாடலைப் பாரீர் !.

-----------------------------------------------------------------------------------------

பாடல்.15.

-----------------------------------------------------------------------------------------

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்கதனுக் காகார மானாற்போல் பாங்கறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரங்

கல்லின்மே லிட்ட கலம் !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி

ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனாற் போல் பாங்கு அறியாப்

புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின் மேல் இட்ட கலம் !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

வேங்கை வரிப்புலி நோய் = வரிகளை உடைய வேங்கைப் புலியின் விடநோயை (நஞ்சினால் ஏற்பட்ட நோயை) தீர்த்த = போக்கிய ; விடகாரி = நஞ்சு முறிவு மருத்துவன் ; ஆங்கு அப்பொழுதே ; அதனுக்கு = அப்புலிக்கு ; ஆகாரம் ஆனாற் போல் = இரையானாற் போல ; பாங்கு அறியா = நன்றியறிவு இல்லாத ; புல் அறிவாளர்க்கு = அற்ப அறிவினருக்கு ; செய்த உபகாரம் = செய்யப்பட்ட உதவி ; கல்லின் மேல் இட்ட கலம் = கல்லின் மேல் போடப்பட்ட மட்கலம் போல (அழிந்து பயனற்றுப் போகும்)

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

காட்டில் வாழ் புலியொன்று நஞ்சு கலந்த  உணவை உண்டதால், நோயுற்றது; அதன்மேல் இரக்கம் கொண்ட நஞ்சு முறிவு மருத்துவன் ஒருவன் மாற்று மருந்தைக் கொடுத்து அதைப் பிழைக்க வைத்தான்; உயிர்த்து எழுந்தவுடன் அந்தப் புலி முதல் வேலையாக அந்த மருத்துவனையே அடித்துக் கொன்று உண்டுவிட்டது. அதைப்போலத் தான் தீயவர்களுக்கு நாம் செய்யும் உதவியும் !

பகுத்தறிவும் பண்பாடும் இல்லாத  இழிந்த இயல்பினருக்கு நாம் உதவி செய்யக் கூடாது.  தேவையற்ற இரக்கம் கொண்டு  அவர்களுக்கு  உதவி செய்தால்  கல்லின் மேலே போடப்பட்ட மண் கலத்தை போல, நம் உதவியின் பயன் நொறுங்கி அழிந்துபோய்விடும் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

 தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.ஆ:2050,மடங்கல்(ஆவணி),18]

{04-09-2019}

-----------------------------------------------------------------------------------------

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (16) அடக்கம் உடையார் அறிவிலர் என்று !

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணலாகாது !

----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

--------------------------------------------------------------------------------------

பாடல்.16.

--------------------------------------------------------------------------------------

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா மடைத்தலையில்

ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாங் கொக்கு !

-------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------------------------------------------

அடக்கம் உடையார் அறிவு இலர் என்று எண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா மடைத் தலையில்

ஓடும் மீன் ஓட உறு மீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு !

-------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------------------------------------------------------

கொக்கு = கொக்கானது ; மடைத்தலையில் = நீர் மடையினிடத்து ; ஓடும் மீன் ஓட = ஓடுகின்ற சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருக்க ; உறு மீன் = (இரையாதற்கேற்ற) பெரிய மீன் ; வரும் அளவும் = வரும் வரையும் ; வாடி இருக்கும் = அடங்கியிருக்கும் ; (அதுபோல) அடக்கம் உடையார் = (தக்க பகைவர் வரும் வரையும்) அடங்கியிருப்பவரை ; அறிவு இலர் என்றெண்ணி = அறிவு இல்லாதவர் என்று கருதி ; கடக்க = அவரை வெல்வதற்கு ; கருதவும் வேண்டா = நினைக்கவும் வேண்டுவதில்லை.

--------------------------------------------------------------------------------------

பொருளுரை:

--------------------------------------------------------------------------------------

நீரோடும் மடைத் தலையில் சிறிய மீன்களெல்லாம் ஓடிக்கொண்டிருக்க, தனக்கு இரையாகத் தக்க பெரிய மீன் வரும் வரையில் எப்படி கொக்கு அடக்கமாகக் காத்து  இருக்குமோ, அதுபோல்தான் சான்றோர்களும் பொறுமையாகக் காத்திருப்பார்கள்.

கீழ்மைக் குணம் படைத்தோர் தொடுக்கும் சொல்லம்புகளுக்கு  உடனுக்குடன் எதிர்வினை ஆற்ற மாட்டார்கள் !

ஆனால், பெரிய மீன் வந்ததும் கொக்கு அதை ஒரே கொத்தில் கௌவிப் பிடிப்பதைப்போல, சான்றோரும், தக்க வேளை வந்ததும், சொல்லம்பு விடுத்து வரும் கீழோரை, மடக்கிப் பிடித்து மீண்டும் தலைதூக்கா வண்ணம் முடக்கிப் போட்டுவிடுவார்கள !

அடக்கம் உடையவர்கள் அறிவில்லாதவர்கள் என்று ஏளனமாகக் கருதி அவர்களை வெல்ல நினைப்பவர்கள் இறுதியில் வீழ்ந்து போவார்கள் ! அவர்களுக்கு மீட்சி என்பது கிடையாது !

--------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

--------------------------------------------------------------------------------------

அடக்கம் உடையாரது வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவர்க்குத் தப்பாது கேடு வரும்.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052 ,சிலை(மார்கழி),04]

{19-12-2021}

--------------------------------------------------------------------------------------

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (17) அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை !

 குளம் வற்றினால் நீர்ப்பறவைகள் பறந்து சென்று விடும் !

---------------------------------------------------------------------------------------

அற்ற குளத்து அறு நீர்ப்பறவை போலஎன்ற வரிகளைக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். காலங்கள் பல கடந்தாலும், கரைந்து போகாத இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் நமது தமிழ் மூதாட்டி ஔவையார் தான். இவர் இயற்றிய மூதுரையில் 17 –ஆவது பாடலாக வரும் அற்ற குளத்து அறு நீர்ப்பறவை....என்ற பாடலைப் பார்ப்போமா !

--------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (17)

--------------------------------------------------------------------------------------

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழி தீர்வார் உறவல்லர் அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு !

-------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------------------------------------

அற்ற குளத்து அறு நீர்ப்பறவை போல்

உற்றுழி தீர்வார் உறவு அல்லர் அக் குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு !

--------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

--------------------------------------------------------------------------------------

அற்ற குளத்தின் = நீர் வற்றிய குளத்தினின்றும் ; அறு = நீங்குகிற ; நீர்ப் பறவை போல் = நீர் வாழ் பறவைகள் போல ; உற்றுழி = நமக்கு வறுமை வந்த பொழுது ; தீர்வார் = நம்மை விட்டு விலகிச் செல்வோர் ; உறவு அல்லர் = உறவினர் ஆகார் ; அக்குளத்தில் = அந்தக் குளத்திலுள்ள ; கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல = கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ; ஒட்டி உறுவார் = நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உறவு = உறவினராவார்.

---------------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------------------------------------------------------------------------

குளத்தில் நீர் நிறைந்திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மனமில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களேயானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல. உறவினர்கள்என்று சொல்லிக் கொள்ளும் அருகதை அற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள் !

---------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

----------------------------------------------------------------------------------------

வறுமை வந்த போதும் சேர்ந்திருந்து துன்பம் அநுபவிப்போரே உறவினராவார் !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"மூதுரை” வலைப்பூ,.

[தி.ஆ:2052, சிலை (மார்கழி) 04]