தொழில்கள் எல்லாம் நற்பயனைத் தந்துவிடுவதில்லை. !
-----------------------------------------------------------------------------------------
கி.பி.9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”மூதுரை”யைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில்
ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். 30 பாடல்களைக் கொண்ட இந்நூலில்
பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு
பாடல்:-
-----------------------------------------------------------------------------------------
பாடல்.(22)
-----------------------------------------------------------------------------------------
எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம் – கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக்
காஞ்சிரங்கா யீந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை !
-----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே
கருதியவாறு ஆமோ கருமம் - கருதிப் போய்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரம் காய் ஈந்ததேல்
முன் பவத்தில் செய்த வினை !
----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
----------------------------------------------------------------------------------------
இரங்கும் மட நெஞ்சே = வருந்துகின்ற அறியாமை
பொருந்திய மனமே ; கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு
= (நல்ல பயனைப் பெறலாமென்று) நினைத்துப்
போய்க் கற்பகத் தருவை அடைந்தவர்க்கு ; காஞ்சிரங்காய்
ஈந்ததேல் = (அது) எட்டிக்காயைக்
கொடுத்ததாயின் ; முற்பவத்தில் செய்த வினை = (அதற்குக் காரணம் அவர்) முற்பிறப்பிற் செய்த
தீவினையாகும் ; கருமம் கருதியவாறு ஆமோ = செய் தொழில்கள் (நீ) நினைத்தபடி
ஆகுமோ ; எழுதியவாறே காண் = (கடவுள்)
விதித்தபடியே ஆகும் என்று அறிவாயாக !
----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------------------------------------------------------------------------
அறியாமையில் உழலும் மட நெஞ்சே ! நல்லபயனைப் பெறலாம்
என்று நினைத்துப் போய்க் கற்பகத் தருவை அடைந்தவர்க்கு, அஃது
எட்டிக்காயைக் கொடுக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவர்
முற்பிறப்பில் செய்த தீவினையாகும் !
அதுபோல், செய்கின்ற தொழில்கள் எல்லாம் நீ நினைத்தபடி
நற்பயனைத் தந்துவிடுவதில்லை. கடவுள் விதித்தபடியே அவை
நடைபெறும் என்பதை அறிவாயாக !
-----------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:- நீதிக் கருத்துகளையே சொல்லி வந்த
ஔவையார், அதிலிருந்து சற்று விலகி
கற்பகம், கடவுள், தலைவிதி, ஊழ்
என்றெல்லாம் இப்பாடலில் சொல்லியிருப்பது
இது அவரது பாடலாக இராதோ என்ற
எண்ணத்தைத்
தோற்றுவிக்கிறது !
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
செய்தொழில்கள் ஊழின்படியன்றி அவரவர்
நினைத்தபடி ஆகா !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”மூதுரை” வலைப்பூ,
[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]
{18-12-2021}
------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக