கல்வியறிவு இல்லாத மாக்களுக்கு கற்றவர் சொல் கூற்றம் !
------------------------------------------------------------------------------------------
கூற்றங்கள் பலவகை உள. அவற்றுள் நான்கு
கூற்றங்கள் பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார் ஔவையார் ! அவர்
இயற்றிய மூதுரையிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக !
-----------------------------------------------------------------------------------------
பாடல்.(27)
------------------------------------------------------------------------------------------
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் – மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே
இல்லிற் கிசைந்தொழுகாப் பெண் !
-----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------
கல்லாத மாந்தர்க்கு கற்று உணர்ந்தார்
சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் – மெல்லிய
வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம்
கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் !
------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------------
கல்லாத மாந்தர்க்கு = கல்வியறிவு இல்லாத
மாக்களுக்கு ; கற்று உணர்ந்தார் சொல் = கற்று அறிந்தவருடைய உறுதிமொழி ; கூற்றம் = துன்பத்தைத் தருவதாம் ; அல்லாத மாந்தர்க்கு =
(அறத்தில் நாட்டம் உடையர்) அல்லாத மனிதர்க்கு ;
அறம் = அறத் தன்மையே அழிவைத் தருவதாம் ;
மெல்லிய வாழைக்கு = மெல்லிய இலையுடைய வாழை
மரத்துக்கு ; தான் ஈன்ற காய் கூற்றம் = அஃது ஈன்ற காயே அழிவைத் தருவதாம் ; (அதுபோல) இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் = இல்வாழ்க்கைக்குப்
பொருந்தி நடவாத மனைவி ; கூற்றம் (கணவனுக்கு)
அழிவைத் தருவளாம்.
------------------------------------------------------------------------------------------
கூற்றம் =
துன்பம் தரும் நிகழ்வு
எனப் பொருள் கொள்ள வேண்டும்.
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:

கற்றறிந்த அறிஞர்களின் சொற்கள்
உண்மைகளையே எதிரொளிக்கும் என்பதால் கல்லாத மாந்தர்களின் மனத்துக்கு அவை ஏற்புடையவையாக
இரா; எனவே அவை
அவர்களுக்குத் துன்பம் அளிப்பதாகவே இருக்கும் !
அறவழிகளில் நாட்டம் கொள்ளாமல் மற
வழிகளைத் தேர்வு செய்து ஒழுகிவரும் மூட மாந்தர்களுக்கு, பிறர் செய்யும் அறச்
செயல்கள் அவர்கள் மனத்துக்குத் துன்பம் தருவதாகவே அமையும் !
உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும்
மாந்தர்களுக்கு நலந்தரும் மூலிகைகளாகவே திகழ்ந்தாலும்,
வாழை மரத்துக்கு அது ஈன்ற காய்களே துன்பமான முடிவைத் தருவதாக
அமையும் !
இல்லற வாழ்வில் கணவனுடன் ஒத்துப்
போகாமல் தனக்கெனத் தனி வழி கண்டு அதில்
தடம் பதிக்க முயலும்
பொருத்தமில்லாத மனையாளே கணவனுக்குத் துன்பம் தரும் காரணியாக அமைந்திடுவாள் !
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
கற்று அறிந்தவருடைய உறுதிமொழியினாலே கல்லாதவருக்கும், தருமத்தினாலே
பாவிகளுக்கும், பொருத்தமில்லாத மனையாளினாலே கணவனுக்கும்
துன்பம் விளையும்.
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”மூதுரை”வலைப்பூ,
[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]
{18-12-2021}
------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக