அடுத்து
முயன்றாலும் ஆகும் நாள் !
-----------------------------------------------------------------------------------------
தமிழ்
மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் ”மூதுரை”யும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட
இந்நூலுக்கு “வாக்குண்டாம்”
என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து
உங்களுக்காக ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------
பாடல் (05)
------------------------------------------------------------------------------------------
அடுத்து
முயன்றாலு மாகுநா ளன்றி
எடுத்த
கருமங்க ளாகா – தொடுத்த
உருவத்தால்
நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
பருவத்தா
லன்றிப் பழா.
------------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி-
எடுத்த
கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால்
நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால்
அன்றிப் பழா.
------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
----------------------------------------
தொடுத்த
= கிளைத்த ; உருவத்தால் நீண்ட = வடிவத்தால் நீண்ட ; உயர் மரங்கள் எல்லாம் = உயர்ந்த மரங்களெல்லாம் ;
பருவத்தால் அன்றி = பழுக்கும் காலம் வந்தால்
அல்லாமல் ; பழா = பழுக்க மாட்டாவாம் ;
(அதுபோல) அடுத்து முயன்றாலும் = அடுத்தடுத்து முயற்சி செய்தாலும் ; ஆகுநாள் அன்றி =
முடியும் காலம் வந்தால் அல்லாமல் ; எடுத்த
கருமங்கள் = மேற்கொண்ட செயல்கள் ; ஆகா =
முடியாவாம்.
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-------------------------
கிளைத்துச் செழித்து உயர்ந்து வளர்ந்திருக்கும்
தரமான மரங்களென்றாலும் கூட,
காய்த்துக் கனிதருகின்ற பருவம் வந்தால் தான் அவை காய்க்கும்;
நமக்குக் கனிகளையும் தரும் !
அதுபோல, நாம் எந்தச் செயலைத்
தொடங்கினாலும், வாய்ப்பான நேரத்தையும் காலத்தையும் அறிந்தே
தொடங்க வேண்டும்; வாய்ப்பில்லா நேரமாயின் எத்துணை
முயன்றாலும் அச்செயலை நாம் செய்து முடித்திடவே முடியாது !
------------------------------------------------------------------------------------------
கருத்துச்
சுருக்கம்:
-------------------------------
எந்தச்
செயலும் முடியும் காலத்தில் தான் முடியும்;
ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
மூதுரை
வலைப்பூ.
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 05)
{20-12-2021}
------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக