உற்ற இடத்தில் உயிர் வழங்கும் !
-----------------------------------------------------------------------------------------
தமிழ்
மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் ”மூதுரை”யும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட
இந்நூலுக்கு “வாக்குண்டாம்”
என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து
உங்களுக்காக ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------
பாடல் (06)
------------------------------------------------------------------------------------------
உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ – கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.
-----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்
----------------------------------------------------------------------------------------
உற்ற
இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக்
கண்டால் பணிவரோ – கல் தூண்
பிளந்து
இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து
வளையுமோ தான்.
---------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
கல்
தூண் = கருங்கல் கம்பமானது ;
பெரும் பாரம் தாங்கின் = பெரிய பாரத்தைச்
சுமந்தால் ; பிளந்து இறுவது அல்லால் = பிளந்து
முறிவது அல்லாமல் ; தான் தளர்ந்து வளையுமோ = தான் தளர்வுற்று வளையுமோ (வளையாது ; அதுபோல), உற்ற இடத்தில் = மானக்கேடு
உண்டானவிடத்தில் ; உயிர் வழங்கும் தன்மையோர் = தம் உயிரை விடும் குணமுடையோர் ; பற்றலரை = பகைவரை ; கண்டால் = பார்த்தால்
; பணிவரோ = வணங்குவரோ ? (வணங்கார் !)
---------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------
கருங்கல்லால் ஆன கம்பம் அளவு கடந்து பாரம் ஏற்றினால் துளியும் வளைந்து கொடுக்காது; மாறாக பிளந்து
முறிந்துவிடும் !
அதுபோல, மானக்கேடு
ஏற்பட்டால் உயிரையே விடுவிடத் துணியும்
சான்றோர்கள், பகைவர்களுக்கு வளைந்து கொடுத்துத் தலை தாழ்ந்து
செல்ல மாட்டார்கள்; மாறாக மானத்துடன் தலை
நிமிர்ந்து செல்வார்கள் !
--------------------------------------------------------------------------------------
கருத்துச்
சுருக்கம்:
-------------------------------
மானமுடையவர்
இடர் வரும் போது உயிரை விட்டாலும் விடுவார்களேயன்றி மானத்தை விட்டு வாழமாட்டார் ! !
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
மூதுரை
வலைப்பூ.
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 05)
{20-12-2021}
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக