தீயாரைக் காண்பதுவும் தீதே !
----------------------------------------------------------------------------------------
தமிழ்
மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் ”மூதுரை”யும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட
இந்நூலுக்கு “வாக்குண்டாம்”
என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து
உங்களுக்காக ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------
பாடல் (09)
------------------------------------------------------------------------------------------
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதேஎ – தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீது !
-----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதேஎ; – தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது !
----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------
தீயாரை
= தீய குணம் உடையவரை ;
காண்பதுவும் = பார்ப்பதும் ; தீதே = தீயதே ; தீயார் =
தீயவருடைய ; திரு அற்ற = பயனில்லாத ; சொல் = சொல்லை ;
கேட்பதுவும் = கேட்டலும் ; தீதே = தீயதே ; தீயார் =
தீயவருடைய ; குணங்கள் = தீக்குணங்களை
; உரைப்பதுவும் = பேசுதலும் ; தீதே = தீயதே ; அவரோடு =
அத்தீயவருடன் ; இணங்கி இருப்பதுவும் = கூடியிருத்தலும் ; தீதே – தீயதே
!
---------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-------------------------
தீயகுணமுடைய கீழ்மக்களை அவர்களது இருப்பிடத்துக்குச்
சென்று அடிக்கடிக் காண்பதுவும் தீயது ! அவர்களுடைய
பயனில்லாத தீய அறிவுரைகளை ஈடுபாட்டுடன்
கேட்டு ஒழுகுதலும் தீயது ! தீயவர்களின் தீய இயல்புகளை மனத்தில் உள்வாங்குதலும்
அவற்றை பிறரிடம் புகழ்ந்து உரைப்பதும் தீயது ! அத்தகைய தீயவர்களுடன் கூடி வாழ்தலும் தீயது ! ஏனெனில்
இத்தகைய செயல்களால் நமக்கு தீய அறிவு உண்டாகும்; நம்மிடம் தீய
ஒழுக்கமும் குடிகொள்ளும் !
----------------------------------------------------------------------------------------
கருத்துச்
சுருக்கம்:
------------------------------------
தீயாரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும் தீயொழுக்கமும் உண்டாகும் !
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”மூதுரை” வலைப்பூ,
[தி.ஆ:2052, சிலை (மார்கழி),05]
{20-12-2021}
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக