நல்லாரைக் காண்பதுவும் நன்றே !
-----------------------------------------------------------------------------------------
தமிழ்
மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் ”மூதுரை”யும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட
இந்நூலுக்கு “வாக்குண்டாம்”
என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து
உங்களுக்காக ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------
பாடல் (08)
-----------------------------------------------------------------------------------------
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பது வும்நன்றேஎ – நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று.
-----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்
----------------------------------------------------------------------------------------
நல்லாரைக்
காண்பதுவும் நன்றே; நலம் மிக்க.
நல்லார்
சொல் கேட்பதுவும் நன்றேஎ – நல்லார்
குணங்கள்
உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி
இருப்பதுவும் நன்று.
---------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
நல்லாரை
= நற்குணமுடையோரை ;
காண்பதுவும் = பார்ப்பதுவும் ; நன்றே = நல்லதே ; நல்லார் =
நல்லவருடைய ; நலம் மிக்க = பயன் நிறைந்த ; சொல் = சொல்லை ;
கேட்பதுவும் = கேட்டலும் ; நன்றே = நல்லதே ; நல்லார் =
நல்லவருடைய ; குணங்கள் = நற்குணங்களை ; உரைப்பதுவும் = பேசுதலும்
; நன்றே = நல்லதே ; அவரோடு = அந் நல்லவருடன் ; இணங்கி
இருப்பதுவும் = கூடியிருத்தலும் ; நன்று
= நல்லதே !
‘---------------------------------------------------------------------------------------
பொருளுரை:
நற்குணமுடைய சான்றோர்களை அவர்களது இருப்பிடத்துக்குச்
சென்று அடிக்கடிக் காண்பது நல்லது ! அவர்களுடைய பயன்
மிகுந்த அறிவுரைகளை ஈடுபாட்டுடன் கேட்டு ஒழுகுதலும் நல்லது ! நல்லவர்களின்
அரும்பெரும் இயல்புகளை மனத்தில் உள்வாங்கிப் பிறரிடம் எடுத்து உரைப்பதும் நல்லது ! அத்தகைய நல்லவர்களுடன் கூடி வாழ்தலும் நல்லது ! ஏனெனில்
இத்தகைய செயல்களால் நமக்கு நல்லறிவு உண்டாகும்; நம்மிடம்
நல்லொழுக்கமும் குடிகொள்ளும் !
---------------------------------------------------------------------------------------
கருத்துச்
சுருக்கம்:
------------------------------------
நல்லவரைக்
காணினும், அவர் சொல்லைக்
கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் நல்லறிவும் நல்லொழுக்கமும் உண்டாகும் !
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
மூதுரை
வலைப்பூ.
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 06)
{21-12-2021}
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக