தீமை செய்தாலும் அறிவுடையோர் பிறருக்கு நன்மையே செய்வர் !
----------------------------------------------------------------------------------------
கி.பி.9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”மூதுரை”யைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில்
ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். 30 பாடல்களைக் கொண்ட இந்நூலில்
பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு
பாடல்:-
-----------------------------------------------------------------------------------------
பாடல் (30)
-----------------------------------------------------------------------------------------
சாந்தனையும் தீயனவே செய்திடினுந்
தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் –
மாந்தர்
குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம்.
----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------
சாம் தனையும் தீயனவே செய்திடினும்
தாம் அவரை
ஆம் தனையும் காப்பர் அறிவு உடையோர் –
மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத்
தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
மரம் = மரங்களானவை ; மாந்தர்
குறைக்கும் தனையும் = (தம்மை) மனிதர் வெட்டுமளவும் ; குளிர் நிழலைத் தந்து
மறைக்கும் = குளிர்ச்சியாகிய நிழலைத் தந்து வெயிலினை மறைக்கும் ; (அதுபோல்) அறிவுடையோர்
= அறிவுடையவர் ; சாம் தனையும் = (தாம்) இறந்து போமளவும்; தீயனவே செய்திடினும் =
(பிறர் தமக்கு) தீங்குகளையே செய்தாராயினும் ; தாம் அவரை ஆம் தனையும் காப்பர் =
தாம் அவரையும் தம்மாலே ஆகுமளவும் காப்பார்.
-----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------------------------------------------------------------------------
குளிர் நிழலைத் தந்து வெயிலிலிருந்து
மனித குலத்தைக் காக்கின்றன மரங்கள். ஆனால் மனிதன் அவற்றை வரைமுறையின்றி வெட்டி
வீழ்த்துகிறான். இருந்தாலும் கூட, தன்னை வெட்டும் வரையில் அம்மரங்கள் மனிதனுக்கு
நிழலைத் தருவதில் தவறுவதில்லை !
அதுபோலவே, அறிவுடையோர் தமக்குத்
தீங்கு செய்வோருக்கும் தம்மாலான உதவிகளைச்
செய்து, தமது கடைசிக் காலம் வரையில்
அவர்களையும் காக்கின்ற அருட்பணியில் தம்மை
ஈடுபடுத்திக் கொள்ளத் தவறுவதில்லை !
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
----------------------------------------------------------------------------------------
அறிவுடையவர் தமக்குத் தீங்கு
செய்வோருக்கும் நன்மையே செய்வார்.
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"மூதுரை” வலைப்பூ,
[தி.ஆ:2052: சிலை (மார்கழி) 03]
{18-12-2021}
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக