(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 18 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (30) சாந்தனையும் தீயனவே செய்திடினும் !

 தீமை செய்தாலும் அறிவுடையோர் பிறருக்கு நன்மையே செய்வர் !

----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

-----------------------------------------------------------------------------------------

பாடல் (30)

-----------------------------------------------------------------------------------------

சாந்தனையும் தீயனவே செய்திடினுந் தாமவரை

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்

குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாங் கண்டீர் மரம்.

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------

சாம் தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

ஆம் தனையும் காப்பர் அறிவு உடையோர் – மாந்தர்

குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்.

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

மரம் = மரங்களானவை ; மாந்தர் குறைக்கும் தனையும் = (தம்மை) மனிதர் வெட்டுமளவும் ; குளிர் நிழலைத் தந்து மறைக்கும் = குளிர்ச்சியாகிய நிழலைத் தந்து வெயிலினை மறைக்கும் ; (அதுபோல்) அறிவுடையோர் = அறிவுடையவர் ; சாம் தனையும் = (தாம்) இறந்து போமளவும்; தீயனவே செய்திடினும் = (பிறர் தமக்கு) தீங்குகளையே செய்தாராயினும் ; தாம் அவரை ஆம் தனையும் காப்பர் = தாம் அவரையும் தம்மாலே ஆகுமளவும் காப்பார்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

குளிர் நிழலைத் தந்து வெயிலிலிருந்து மனித குலத்தைக் காக்கின்றன மரங்கள். ஆனால் மனிதன் அவற்றை வரைமுறையின்றி வெட்டி வீழ்த்துகிறான். இருந்தாலும் கூட, தன்னை வெட்டும் வரையில் அம்மரங்கள் மனிதனுக்கு நிழலைத் தருவதில் தவறுவதில்லை !

அதுபோலவே, அறிவுடையோர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் தம்மாலான  உதவிகளைச் செய்து, தமது கடைசிக் காலம் வரையில் அவர்களையும் காக்கின்ற அருட்பணியில்  தம்மை ஈடுபடுத்திக் கொள்ளத் தவறுவதில்லை !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

----------------------------------------------------------------------------------------

அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வார்.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052: சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக