(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

நீரளவே ஆகுமாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீரளவே ஆகுமாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (07) நீரளவே ஆகுமாம் நீராம்பல் !

நீரளவே ஆகுமாம் நீராம்பல் !

 ---------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு வாக்குண்டாம்என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------

பாடல் (07)

--------------------------------------------------------------------------------------

நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு மேலைத்

தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்

குலத்தளவே யாகுமாம் குணம் !

--------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

--------------------------------------------------------------------------------------

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு; – மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்;

குலத்து அளவே ஆகுமாம் குணம்.

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

நீராம்பல் = குளத்து நீரில் வளரும் அல்லியானது ; நீர் அளவே ஆகுமாம் = நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும் ; (அதுபோல) நுண்ணறிவு = கூரிய அறிவானது ; தான் கற்ற = தான் படித்த ; நூல் அளவே ஆகும் = நூல்களின் தன்மை அளவாகவே இருக்கும் ; தான் பெற்ற செல்வம் = தான் அடைந்திருக்கும் பொருட்  செல்வம் ; மேலை = மேன்மை தரும்  ; தவத்து அளவே ஆகுமாம் = செல்வத்தின் மீதான பற்றின் அளவே ஆகும் ; குணம் = குணவியல்புகள் ; குலத்து அளவே ஆகும் = (தான் பிறந்த) குடியின் அளவாகவே இருக்கும்.

‘---------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------------

எத்துணை நீளமாகத் தண்டு  இருந்தாலும், குளத்தில் படர்ந்திருக்கும் அல்லியானது நீரின் உயரத்திற்கு மட்டுமே உயரமுடியும் !

ஒரு மனிதன் எத்தகைய நூல்களைக் கற்கிறான் என்பதை வைத்தே அவனது அறிவு வளர்ச்சியின் தன்மையும் அமையும் !

செய்யும் செயல்களின் மேன்மையைப் பொறுத்தே  வாழ்க்கைக்குத் தேவையான செல்வம் ஒருவனிடம் வந்து சேரும் !

பிறந்த குடியில் தொன்றுதொட்டு நிலவிவரும்  ஒழுக்கவியல்புகளுக்குத் தக்கவாறே ஒரு மனிதனின் குணமும் அமையும் !

---------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------------

நீரின் உயரம் வரை நீராம்பல் உயரும்; கற்கும் நூல்களைப் பொறுத்து அறிவு வளரும்; செல்வத்தின் மீது பற்று வைத்தால் செல்வம் சேரும்; குடிப்பிறப்பை பொறுத்தே குணம் அமையும் !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 05)

{22-12-2021}

----------------------------------------------------------------------------------------