(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

எழுதியவாறே காண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (22) எழுதியவாறே காண் இரங்கு !

தொழில்கள் எல்லாம்  நற்பயனைத் தந்துவிடுவதில்லை. !

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

-----------------------------------------------------------------------------------------

பாடல்.(22)

-----------------------------------------------------------------------------------------

எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே

கருதியவா றாமோ கருமம் கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்கா யீந்ததேல்

முற்பவத்திற் செய்த வினை !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே

கருதியவாறு ஆமோ கருமம் - கருதிப் போய்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரம் காய் ஈந்ததேல்

முன் பவத்தில் செய்த வினை !

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

இரங்கும் மட நெஞ்சே = வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே ; கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு = (நல்ல பயனைப் பெறலாமென்று) நினைத்துப் போய்க் கற்பகத் தருவை அடைந்தவர்க்கு ; காஞ்சிரங்காய் ஈந்ததேல் = (அது) எட்டிக்காயைக் கொடுத்ததாயின் ; முற்பவத்தில் செய்த வினை = (அதற்குக் காரணம் அவர்) முற்பிறப்பிற் செய்த தீவினையாகும் ; கருமம் கருதியவாறு ஆமோ = செய் தொழில்கள் (நீ) நினைத்தபடி ஆகுமோ ; எழுதியவாறே காண் = (கடவுள்) விதித்தபடியே ஆகும் என்று அறிவாயாக !

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

அறியாமையில் உழலும் மட நெஞ்சே ! நல்லபயனைப் பெறலாம் என்று நினைத்துப் போய்க் கற்பகத் தருவை அடைந்தவர்க்கு, அஃது எட்டிக்காயைக் கொடுக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவர் முற்பிறப்பில் செய்த தீவினையாகும் !

அதுபோல்,  செய்கின்ற தொழில்கள் எல்லாம் நீ நினைத்தபடி நற்பயனைத் தந்துவிடுவதில்லை. கடவுள் விதித்தபடியே அவை நடைபெறும் என்பதை அறிவாயாக

-----------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:- நீதிக் கருத்துகளையே சொல்லி வந்த 

ஔவையார், அதிலிருந்து சற்று விலகி  

கற்பகம், கடவுள், தலைவிதி, ஊழ் 

என்றெல்லாம் இப்பாடலில் சொல்லியிருப்பது 

இது அவரது பாடலாக இராதோ என்ற 

எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

செய்தொழில்கள் ஊழின்படியன்றி அவரவர் நினைத்தபடி ஆகா !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

------------------------------------------------------------------------------------------