தாமரைப்பூ அருகில் அன்னம் சேர்வது போல் !
-----------------------------------------------------------------------------------------
கி.பி.9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”மூதுரை”யைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில்
ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். 30 பாடல்களைக் கொண்ட இந்நூலில்
பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு
பாடல்:-
----------------------------------------------------------------------------------------
பாடல்.(24)
-----------------------------------------------------------------------------------------
நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்
சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்
முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம் !
------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------
நல் தாமரைக் கயத்தில் நல் அன்னம்
சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்- கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முது
காட்டில்
காக்கை உகக்கும் பிணம் !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
கயத்தின் – குளத்திலுள்ள ;
நல் தாமரை = நல்ல தாமரைப்பூவை ; நல் அன்னம் சேர்ந்தாற் போல் = நல்ல அன்னப் பறவை
சேர்ந்தாற் போல ; கற்றாரைக் கற்றாரே காமுறுவர் = கல்வியுடையோரை கல்வியுடையோரே விரும்பி (சேர்வர்)
; முதுகாட்டில் = சுடுகாட்டில் உள்ள ; பிணம் = பிணத்தை ; காக்கை
உகக்கும் = காக்கை விரும்பும் ; (அதுபோல்)
கற்பு இலா மூர்க்கரை = கல்வியில்லாத மூடரை ;
மூர்க்கர் = மூடரே ; முகப்பர்
= விரும்புவர்.
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
------------------------------------------------------------------------------------------
குளத்தில் மலர்ந்திருக்கும் அழகிய
தாமரைப் பூவை விரும்பி அன்னப் பறவை அதன் அருகில் சென்று தங்கி மகிழும் ! அதைப்போல, கல்வியறிவு உடைய சான்றோரை அவரைப் போல் கல்வியறிவிற் சிறந்த சான்றோரே விரும்பி
நட்புக் கொள்வர் !
புறங்காட்டில் (சுடுகாடு) கிடக்கின்ற பிணங்களை காக்கைகளே மிக விரும்பி அணுகும் ! அதைப்போல, கல்வியறிவில்லாத மூடர்களை, அவரைப் போன்ற மூடர்களே
விரும்பி நட்புக் கொள்வர் !
-------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-------------------------------------------------------------------------------------------
கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும்
நட்புச் செய்வர் !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”மூதுரை” வலைப்பூ,
[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]
{18-12-2021}
-----------------------------------------------------------------------------------------