அரசனைவிடப் புலவனே உயர்ந்தவன் ஆவான் !
----------------------------------------------------------------------------------------
”கற்றோர்க்குச் சென்ற
இடமெல்லாம் சிறப்பு” என்னும் சொற்றொடரை அடிக்கடிக்
கேட்டிருப்பீர்கள். எந்தப் பாடலில் இந்த அடி வருகிறது,
அந்தப் பாடலை இயற்றியது யார் என்னும் செய்திகள் பலருக்கும் தெரியாது
என்பதே உண்மை. ஔவையார் இயற்றிய மூதுரையில் 26-ஆம் செய்யுளில் இவ்வரி வருகிறது. இதோ அந்தப் பாடல் !
------------------------------------------------------------------------------------------
பாடல்.(26)
------------------------------------------------------------------------------------------
மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்ற விடமெல்லாஞ் சிறப்பு !
------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------
மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர்
தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை; கற்றோற்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு !
-------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------------
மன்னனும் = அரசனையும் ; மாசு அறக் கற்றோனும் = கசடறக் கற்ற புலவனையும் ;
சீர்தூக்கின் = ஆராய்ந்து பார்த்தால் ;
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் = அரசனைக்
காட்டிலும் புலவனே சிறப்பு உடையவன் ஆவன் ; மன்னற்கு =
அரசனுக்கு ; தன் தேசம் அல்லால் = தன் நாட்டில் அல்லாமல் (பிற நாடுகளில்) ; சிறப்பு இல்லை = சிறப்பு இல்லையாகும் ; கற்றோற்கு = புலவனுக்கோ எனில் ; சென்ற இடமெல்லாம் சிறப்பு = அவன் சென்ற எல்லா
நாடுகளிலும் சிறப்பு உண்டாகும் !
-----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------------------------------------------------------------------------
நாடாளும் அரசனையும் நாவில் கல்விச்
சுடர் தெறிக்கும் கற்றறிந்த புலவனையும் (நல்லறிஞரையும்) ஒப்பிட்டால், அரசனைவிடக்
கசடறக் கற்ற புலவனே உயர்ந்தவன் ஆவான்.
எப்படியெனில், அரசனுக்கு தனது நாட்டில் மட்டுமே சிறப்பு; பிற நாடுகளில் சிறப்புக்
கிடையாது; ஆனால்
கற்றறிந்த புலவனுக்கு அவன் சொந்த நாட்டில் மட்டுமல்லாது செல்கின்ற எல்லா
நாடுகளிலும் அவனது கல்வியின் காரணமாகச் சிறப்பு உண்டாகும் ! ஆகவே
இருவரில் உயர்ந்தவன் கசடறக் கல்வியைக் கற்ற புலவனே !
------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
------------------------------------------------------------------------------------------
அரசனிலும் புலவனே சிறப்புடையவன் ஆவான் !
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”மூதுரை”வலைப்பூ,
[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]
{18-12-2021}
----------------------------------------------------------------------------------------