சந்தனக்கட்டை தேய்ந்துபோனாலும் மணம் குன்றாது !
-----------------------------------------------------------------------------------------
கி.பி.9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”மூதுரை”யைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில்
ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். 30 பாடல்களைக் கொண்ட இந்நூலில்
பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு
பாடல்:-
---------------------------------------------------------------------------------------
பாடல் (28)
---------------------------------------------------------------------------------------
சந்தன மென்குறடு தான்தேய்ந்த
காலத்துங்
கந்தங் குறைபடா தாதலால் – தந்தந்
தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர்
கேட்டால்
மனஞ்சிறிய ராவரோ மற்று.
---------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
சந்தன மென் குறடு தான் தேய்ந்த
காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் – தம் தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர்
கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று.
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
மெல் சந்தனக் குறடு = மென்மையான சந்தனக்
கட்டையானது ; தான் தேய்ந்த காலத்தும் = தான் தேய்ந்து போன காலத்திலும் ; கந்தம் குறைபடாது =
மணம் குறையாது ; ஆதலால் = ஆதலினாலே ; தார் வேந்தர் = மாலை
அணிந்த அரசர்கள் ; தம் தம் தனம் சிறியர் ஆயினும் = தங்கள் தங்கள் செல்வத்தில் குறைந்தவரானாலும் ; கேட்டால்
= அவ்வறுமையினாலே ; மனம் சிறியர் ஆவரோ =
மனம் சுருங்கினவர் ஆவரோ (ஆகார்).
-----------------------------------------------------------------------------------------
குறடு = மரத் துண்டு எனப் பொருள்
கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------------------------------------------------------------------------
சந்தனக்கட்டையைக் கல்லில் தேய்த்துத்
தேய்த்துச் சந்தனக் குழம்பு எடுப்பார்கள்;
இறுதியில் அது தேய்ந்து மிக மெலிதாகிப் போகும்; அவ்வாறு தேய்ந்து சிறுத்துப்
போனாலும் கூட, சந்தனக்கட்டை
தன் இயல்பான மணத்தை மட்டும் இழப்பதில்லை !
அதுபோல, நாட்டில் மழை பொய்த்து,
விளைச்சல் குறைந்து வறுமை ஏற்பட்டு, ஆளும் அரசர்கள் தம் செல்வ வளத்தில்
குறைந்து போனாலும், அவர்கள் தம் பரந்த பார்வையை இழந்து மனம் சுருங்கிப் போவதில்லை ! செல்வத்தில் குறைந்தாலும் மனவிரிவு குன்றுவதில்லை !
----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
----------------------------------------------------------------------------------------
அரசர்கள் செல்வ வளத்தில் குறைய
நேர்ந்தாலும், அவர்களது பரந்த மனம் சுருங்கிவிடாது !
----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”மூதுரை” வலைப்பூ,
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 03]
{18-12-2021}