சான்றோர்களுக்கு நாம் செய்யும் உதவி !
---------------------------------------------------------------------------------------
தமிழ்
மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் ”மூதுரை”யும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட
இந்நூலுக்கு “வாக்குண்டாம்”
என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து
உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------
பாடல் (02)
---------------------------------------------------------------------------------------
நல்ல ரொருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மே லெழுத்துப்போற் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார் கீந்த உபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர்.
--------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
--------------------------------------------------------------------------------------
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்
மேல் எழுத்துப் போல் காணுமே – அல்லாத
ஈரம்
இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்
மேல் எழுத்திற்கு நேர்.
--------------------------------------------------------------------------------------
”உபகாரம்” என்னும் வடசொல்லுக்கு “உதவி” என்று
தமிழில் பொருள்.
--------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
நல்லார் ஒருவர்க்கு = நற்குணம் உடைய
ஒருவர்க்கு : செய்த உபகாரம் = செய்த
உதவியானது ; கல் மேல் எழுத்துப் போல் = கருங்கல்லின் மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல ; காணும்
= அழியாது விளங்கும் ; அல்லாத =
நல்லவர் அல்லாத ; ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு =
அன்பிலாத மனம் உடையார்க்கு ; ஈந்த உபகாரம் =
செய்த உதவியானது ; நீர் மேல் எழுத்திற்கு =
நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ; நேர் =
ஒப்பாக (அழிந்துவிடும்).
-------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------
நல்லியல்புகள் உடைய சான்றோர்களுக்கு
நாம் செய்யும் உதவியை அவர்கள் எப்பொழுதும் மறக்கமாட்டார்கள் ! கருங்கல்லில்
வெட்டப்பட்ட எழுத்துகளைப் போல அஃது என்றென்றும் அவர்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்
! ஆனால், நெஞ்சில் அன்பில்லாத கீழ்மை
மனிதர்களுக்கு நாம் செய்கின்ற உதவியை
அவர்கள் அப்பொழுதே மறந்துவிடுவார்கள்; தண்ணீரின் மேல்
எழுதும் எழுத்துகள் எப்படி அக்கணமே அழிந்து போகுமோ அவ்வாறே அவர்கள் நெஞ்சிலும்
நன்றியுணர்வு துளிக்கூட நிலைபெறாமல் அப்பொழுதே அழிந்துபோகும் !
--------------------------------------------------------------------------------------
கருத்துச்
சுருக்கம்:
-------------------------------
நல்லவருக்குச் செய்த உதவி என்றும்
நிலைபெற்று விளங்கும்; தீயவருக்குச் செய்த உதவி. செய்த அப்பொழுதே
அழிந்துவிடும்!
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
மூதுரை
வலைப்பூ.
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 06)
{21-12-2021}
------------------------------------------------------------------------------------------