(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

உடன் பிறந்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (20) உடன் பிறந்தார் சுற்றத்தார் !

 உடன்பிறந்தார் அனைவருமே நல்லவர் அல்லர் !

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

----------------------------------------------------------------------------------------

பாடல்.(20)

----------------------------------------------------------------------------------------

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி உடன்பிறவா

மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரு முண்டு !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா;

உடன் பிறந்தே கொல்லும் வியாதி; உடன் பிறவா

மா மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்;

அம் மருந்து போல்வாரும் உண்டு !

-----------------------------------------------------------------------------------------

வியாதி = இது வடசொல். தமிழன்று. நோய், பிணி 

என்பவை ஈடான தமிழ்ச் சொற்கள்

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

வியாதி = நோயானது ; உடன் பிறந்தே கொல்லும் = உடம்புடன் பிறந்தே அதனைக் கொல்லுகின்றது ; (ஆதலால்) உடன் பிறந்தார் = உடன்பிறந்தவர் எல்லோரும் ; சுற்றத்தார் என்று இருக்க வேண்டா = (நன்மை செய்யும்) சுற்றத்தார் என்று கருதியிருக்க வேண்டுவதில்லை ; உடன் பிறவா = உடன் பிறவாத ; மா மலையில் உள்ள மருந்தே பெரிய மலையில் இருக்கின்ற மருந்தே ; பிணி தீர்க்கும் = நோயைப் போக்கும் ; அம்மருந்து போல்வாரும் உண்டு = அம் மருந்து போல் (அயலாராக இருந்தும்) உதவி செய்வாரும் சிலர் உண்டு.

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

நோயானது உடம்புடன் பிறந்தே அதனைக் கொல்லுகின்றது. அதுபோல் உடன் பிறந்தவர்களுள்ளும் நமக்குத் தீமை செய்பவர்களும் உளர். உடன்பிறந்தவர்கள் எல்லோருமே நமக்கு நன்மை செய்யும் சுற்றத்தார் என்று கருதலாகாது !

உடன் பிறவாவிடினும்  மலையிலுள்ள மூலிகைகள், நம்மைப் பீடித்துள்ள நோய்களைத் தீர்க்க உதவுகின்றன. அதுபோல்  உடன்பிறவாத அயலாருள் சிலரும் கூட நமக்கு உதவி செய்வது உண்டு ! அயலாராயிருந்தும் நமக்கு நன்மை செய்பவர்களும் இருக்கிறார்கள் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

உடன்பிறந்தோருள் தீமை செய்வோரும் உண்டு ; அயலாருள் நன்மை செய்வோரும் உண்டு !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052, சிலை (மார்கழி) 04]

{19-12-2021}