(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

கற்பிளவோடு ஒப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்பிளவோடு ஒப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (23) கற்பிளவோடு ஒப்பர் கயவர் !

உடைந்த கல் ஒட்டாது ! உடைந்த பொற்கலம் ஒட்டும் !

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

----------------------------------------------------------------------------------------

பாடல்.(23)

---------------------------------------------------------------------------------------

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே விற்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீரொழுகு சான்றோர் சினம் !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

கல் பிளவோடு ஒப்பர் கயவர் கடும் சினத்துப்

பொன் பிளவோடு ஒப்பாரும் போல்வரே வில் பிடித்து

நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே

சீர் ஒழுகு சான்றோர் சினம் !

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

கயவர் = கீழோர் ; கடுஞ்சினத்து = கடுங் கோபத்தால் வேறுபட்டால் ; கல் பிளவோடு ஒப்பர் = கல்லின் பிளவு போல் திரும்பக் கூடார் ; பொன் பிளவோடு ஒப்பாரும் போல்வர் = (அப்படி வேறுபட்ட போது) பொன்னின் பிளவோடு ஒப்பாவாரும் ஒப்பாவர் (ஒருவர் கூட்டக் கூடுவர்) ; சீர் ஒழுகு சான்றோர் சினம் = சிறப்பு மிக்க பெரியோருடைய கோபம் ; வில் பிடித்து நீர் கிழிய எய்த வடுப்போல மாறும் = வில்லைப் பிடித்து (அம்பினாலே) நீர் பிளக்க எய்த பிளவு போல (அப்போதே) நீங்கும்). 

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

இரு மனிதர்களுக்கு இடையே கடுஞ் சினம் ஏற்பட்டு, மனம் வேறுபட்டுப் பிளவு ஏற்பட்டால், உடைந்த கற்பலகை எப்படி ஒன்று  கூடாதோ அப்படி மீண்டும் ஒன்று கூடாது   ஒழிவர் கடைநிலை இயல்புடைய மனிதர்கள் !

பொற்கலத்தில் பிளவு ஏற்பட்டால், அதை அனலில் காட்டிப் பொடி வைத்து ஊதி பிளவை நீக்குதல்போல மூன்றாம் மனிதர் தலையிட்டு இருவரையும் .அமைதிப்படுத்தி அறிவுறுத்தினால்அதை ஏற்றுத் தயக்கத்துடன்  ஒன்றிணையும் இடைநிலை மனிதர்களும் உண்டு !

ஆனால், வில்லில் நாணேற்றி அம்பினை நீரில் எய்து அதில் ஏற்படுத்தும் நீர்ப் பிளவு எப்படி ஒரே நொடியில் ஒன்று கூடிவிடுமோ அவ்வாறு சினைத்தைக் கைவிட்டு நொடியில் ஒன்றுகூடும் தலைநிலை மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் !

----------------------------------------------------------------------------------------

 கருத்துச் சுருக்கம்:

----------------------------------------------------------------------------------------

கோபத்தினால் வேறுபட்டவிடத்துக் கடையாயார் எக்காலத்துங் கூடார்; இடையாயார் ஒருவர் கூட்டக் கூடுவர் ; தலையாயார் பிரிந்த அப்பொழுதே கூடுவர் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

-----------------------------------------------------------------------------------------