கடல் நீரை அமிழ்த்தி அமிழ்த்தி மொண்டாலும் !
------------------------------------------------------------------------------------------
கி.பி.9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”மூதுரை”யைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில்
ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். 30 பாடல்களைக் கொண்ட இந்நூலில்
பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு
பாடல்:-
------------------------------------------------------------------------------------------
பாடல்.19.

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி – தோழி
நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன் !
------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ் கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன் !
------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------------
ஆழ்கடல் நீர் = ஆழமாகிய கடலின் நீரை ; ஆழ அமுக்கி
முகக்கினும் = அழுந்தும்படியாக அமிழ்த்தி மொண்டாலும் ;
நாழி = ஒரு படியானது ; நால்
நாழி முகவாது = நன்கு படி நீரை மொள்ளாது ; (அது போல்) தோழி = தோழியே ;
நிதியும் கணவனும் = (பெண்டிர்க்கு) மிக்க பொருளும் தக்க கணவனும் கிடைத்தாலும் ; தம் தம்
= அவரவருடைய ; விதியின் பயனே பயன் =
இயன்ற அளவாகிய பயனே (அநுபவிக்கப்படும் )
பயனாகும்.
------------------------------------------------------------------------------------------
நாழி = இப்போது வழக்கிலுள்ள இலிட்டர் (LITRE)
படியைப்போல அக்காலத்தில் வழக்கில் இருந்த
படிக்குப் பெயர் நாழி என்பதாகும்.
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:

கடல் நீரை எத்துணை தான்
அமிழ்த்தி அமிழ்த்தி மொண்டாலும் ஒரு படியானது தனக்குள் ஒரே
நேரத்தில் நான்கு படி நீரை மொள்ள முடியாது !
(ஒரு படி நீரைத் தான் ஒரு நேரத்தில் மொள்ள முடியும்)
அதுபோல். ஒரு பெண்ணுக்கு
நிறைந்த செல்வமும், நிகரற்ற கணவனும் வாய்த்திருந்தாலும்,
எத்துணை இயலுமோ அத்துணை அளவின்றி அதைவிட அதிகமாக அவளால் துய்க்க (அநுபவிக்க) முடியாது !
------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
------------------------------------------------------------------------------------------
வேண்டும் பொருளெல்லாம்
கிடைத்திருந்தாலும், அளவோடுதான் துய்க்க முடியும்; அளவின்றி மிகுதியாய்
அநுபவிக்க முடியாது !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"மூதுரை” வலைப்பூ,
[தி.ஆ:2052, சிலை (மார்கழி),04]
{19-12-2021}