(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

தீயாரைக் காண்பதுவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீயாரைக் காண்பதுவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (09) தீயாரைக் காண்பதுவும் தீதே !

தீயாரைக் காண்பதுவும் தீதே !

 ----------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு வாக்குண்டாம்என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல் (09)

------------------------------------------------------------------------------------------

தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற

தீயார்சொற் கேட்பதுவுந் தீதேஎ தீயார்

குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ

டிணங்கி யிருப்பதுவுந் தீது !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேஎ; – தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது !

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------

தீயாரை = தீய குணம் உடையவரை ; காண்பதுவும் = பார்ப்பதும் ; தீதே = தீயதே ; தீயார் = தீயவருடைய ; திரு அற்ற = பயனில்லாத ; சொல் = சொல்லை ; கேட்பதுவும் = கேட்டலும் ; தீதே = தீயதே ; தீயார் = தீயவருடைய ; குணங்கள் = தீக்குணங்களை ; உரைப்பதுவும் = பேசுதலும் ; தீதே = தீயதே ; அவரோடு = அத்தீயவருடன் ; இணங்கி இருப்பதுவும் = கூடியிருத்தலும் ; தீதே தீயதே !

---------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------------

தீயகுணமுடைய கீழ்மக்களை அவர்களது இருப்பிடத்துக்குச் சென்று அடிக்கடிக் காண்பதுவும் தீயது ! அவர்களுடைய பயனில்லாத தீய அறிவுரைகளை   ஈடுபாட்டுடன்  கேட்டு ஒழுகுதலும் தீயது ! தீயவர்களின் தீய இயல்புகளை மனத்தில் உள்வாங்குதலும் அவற்றை பிறரிடம் புகழ்ந்து உரைப்பதும் தீயது அத்தகைய தீயவர்களுடன் கூடி வாழ்தலும் தீயது ! ஏனெனில் இத்தகைய செயல்களால் நமக்கு தீய அறிவு உண்டாகும்; நம்மிடம் தீய ஒழுக்கமும் குடிகொள்ளும் !

----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------

தீயாரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும் தீயொழுக்கமும் உண்டாகும் !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.:2052, சிலை (மார்கழி),05]

{20-12-2021}

-----------------------------------------------------------------------------------------