வேங்கைப்புலியின் நோய் தீர்த்த மருத்துவன் !
-----------------------------------------------------------------------------------------
நோய்வாய்ப்பட்ட புலியொன்றை மருத்துவம்
பார்த்துப் பிழைக்க வைத்த மருத்துவனை,
அப்புலியே அடித்துக் கொன்று உண்டுவிட்டதாம். இந்தக்
காட்சியை உவமையாக்கி, தீயவருக்கு உதவி செய்யாதீர் என்று
நம்மை எச்சரிக்கும் ஔவையார் தனது “மூதுரை”யில்
படைத்திருக்கும் பாடலைப் பாரீர் !.
-----------------------------------------------------------------------------------------
பாடல்.15.
-----------------------------------------------------------------------------------------
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகார மானாற்போல் – பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரங்
கல்லின்மே லிட்ட கலம் !
----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த
விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனாற் போல் – பாங்கு அறியாப்
புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம் !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
வேங்கை வரிப்புலி நோய் = வரிகளை உடைய வேங்கைப்
புலியின் விடநோயை (நஞ்சினால் ஏற்பட்ட நோயை) தீர்த்த = போக்கிய ; விடகாரி =
நஞ்சு முறிவு மருத்துவன் ; ஆங்கு அப்பொழுதே ;
அதனுக்கு = அப்புலிக்கு ; ஆகாரம் ஆனாற் போல் = இரையானாற் போல ; பாங்கு அறியா = நன்றியறிவு இல்லாத ; புல் அறிவாளர்க்கு = அற்ப அறிவினருக்கு ; செய்த உபகாரம் = செய்யப்பட்ட உதவி ; கல்லின் மேல் இட்ட கலம் = கல்லின் மேல் போடப்பட்ட
மட்கலம் போல (அழிந்து பயனற்றுப் போகும்)
-----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
------------------------------------------------------------------------------------------
காட்டில் வாழ் புலியொன்று நஞ்சு
கலந்த உணவை உண்டதால், நோயுற்றது; அதன்மேல் இரக்கம் கொண்ட நஞ்சு முறிவு மருத்துவன் ஒருவன் மாற்று மருந்தைக்
கொடுத்து அதைப் பிழைக்க வைத்தான்; உயிர்த்து எழுந்தவுடன்
அந்தப் புலி முதல் வேலையாக அந்த மருத்துவனையே அடித்துக் கொன்று உண்டுவிட்டது.
அதைப்போலத் தான் தீயவர்களுக்கு நாம் செய்யும் உதவியும் !
பகுத்தறிவும் பண்பாடும் இல்லாத இழிந்த இயல்பினருக்கு நாம் உதவி செய்யக் கூடாது. தேவையற்ற இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்தால்
கல்லின் மேலே போடப்பட்ட மண் கலத்தை போல, நம் உதவியின்
பயன் நொறுங்கி அழிந்துபோய்விடும் !
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,மடங்கல்(ஆவணி),18]
{04-09-2019}