மூதுரை வலைப்பூ !

(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 20 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (00) வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம் !


-------------------------------------------------------------------------------------

மூதுரை என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வம் அறுக்கும் செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி ஆகியவை இவர் இயற்றிய பிற நூல்கள். ஔவையார் என்னும் பெயரில் பல பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். மூதுரையை இயற்றிய ஔவையார் கி.பி. 9 –ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. அதனாலேயே இவர் பாடலில் வடமொழிச் சொற்கள் பல கலந்திருப்பதை ஆங்காங்கே காணலாம் ! மூதுரையில் மொத்தம் 30 செய்யுள்கள் இருக்கின்றன. முதல் செய்யுளான இறை வணக்கப் பாடல் இதோ :-

 

-------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (01)

----------------------------

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காதுபூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்

தப்பாமற் சார்வார் தமக்கு.

 

------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------

வாக்கு உண்டாம், நல்ல மனம் உண்டாம் மா மலராள்

நோக்கு உண்டாம், மேனி நுடங்காதுபூக் கொண்டு

துப்பு ஆர் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

 

--------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

சிவந்த திருமேனியை  உடைய வேழமுகக் கடவுளின் திருவடிகளை அன்றாடம் தொழுவோர் தமக்குச்  சிறந்த சொல்வளம் உண்டாகும் ! நல்ல சிந்தனை உண்டாகும் ! செல்வத் திருமகளாம் செந்தாமரைச் செல்வியில் அருட் பார்வை கிட்டும் ! இவையல்லாமல் நோய் நொடிகளும்  நெருங்கா  !  அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் நீடு வாழ்வார் !

-------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

 

துப்பு ஆர் = பவளம் போலும் (சிவப்பாகிய) ; திருமேனி = திருமேனியையும் ; தும்பிக்கையான் = துதிக்கை என்னும் கையை உடைய பிள்ளையாரின் ; பாதம் = திருவடிகளை ; பூக்கொண்டு = (வழிபாடு செய்ய) மலர் எடுத்துக்கொண்டு ; தப்பாமல் = நாள்தோறும் தவறாமல் ; சார்வார் தமக்கு = .அடைந்து பூசை செய்வோருக்கு ; வாக்கு உண்டாம் = சொல்வளம் உண்டாகும் ; நல்ல மனம் உண்டாம் = நல்ல சிந்தனை உண்டாகும் ; மாமலராள் = செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின் ; நோக்கு உண்டாம் = அருட்பார்வை உண்டாகும் ; மேனி = அவர் உடம்பு ; நுடங்காது = (பிணிகளால்) வாட்டமுறாது.

 

--------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

பிள்ளையாரைத் தொழுதால், அவருக்குச் சொல்வளம் உண்டாகும்; நல்ல சிந்தனை உண்டாகும் ; திருமகளின் அருட்பார்வை உண்டாகும், உடல் பிணியால் வாட்டமுறாது !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ

[தி.:2052 ,சிலை (மார்கழி),05]

{20-12-2021}

--------------------------------------------------------------------------------------