(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

மன்னனும் மாசறக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்னனும் மாசறக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (26) மன்னனும் மாசறக் கற்றோனும் !

அரசனைவிடப் புலவனே உயர்ந்தவன் ஆவான் !

----------------------------------------------------------------------------------------

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புஎன்னும் சொற்றொடரை அடிக்கடிக் கேட்டிருப்பீர்கள். எந்தப் பாடலில் இந்த அடி வருகிறது, அந்தப் பாடலை இயற்றியது யார் என்னும் செய்திகள் பலருக்கும் தெரியாது என்பதே உண்மை. ஔவையார் இயற்றிய மூதுரையில் 26-ஆம் செய்யுளில் இவ்வரி வருகிறது. இதோ அந்தப் பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல்.(26)

------------------------------------------------------------------------------------------

மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்ற விடமெல்லாஞ் சிறப்பு !

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத்

தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை; கற்றோற்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு !

-------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

மன்னனும் = அரசனையும் ; மாசு அறக் கற்றோனும் = கசடறக் கற்ற புலவனையும் ; சீர்தூக்கின் = ஆராய்ந்து பார்த்தால் ; மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் = அரசனைக் காட்டிலும் புலவனே சிறப்பு உடையவன் ஆவன் ; மன்னற்கு = அரசனுக்கு ; தன் தேசம் அல்லால் = தன் நாட்டில் அல்லாமல் (பிற நாடுகளில்) ; சிறப்பு இல்லை = சிறப்பு இல்லையாகும் ; கற்றோற்கு = புலவனுக்கோ எனில் ; சென்ற இடமெல்லாம் சிறப்பு = அவன் சென்ற எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டாகும் !

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

நாடாளும் அரசனையும் நாவில் கல்விச் சுடர் தெறிக்கும் கற்றறிந்த புலவனையும் (நல்லறிஞரையும்) ஒப்பிட்டால், அரசனைவிடக் கசடறக் கற்ற புலவனே உயர்ந்தவன் ஆவான்.  எப்படியெனில், அரசனுக்கு தனது  நாட்டில் மட்டுமே சிறப்பு;  பிற நாடுகளில் சிறப்புக் கிடையாது; ஆனால்  கற்றறிந்த புலவனுக்கு அவன் சொந்த நாட்டில் மட்டுமல்லாது செல்கின்ற எல்லா நாடுகளிலும் அவனது கல்வியின் காரணமாகச் சிறப்பு உண்டாகும் ! ஆகவே இருவரில் உயர்ந்தவன் கசடறக் கல்வியைக் கற்ற புலவனே !

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

அரசனிலும் புலவனே சிறப்புடையவன் ஆவான் !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை”வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

----------------------------------------------------------------------------------------