(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

சந்தன மென்குறடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (28) சந்தன மென்குறடு தான் தேய்ந்த !

சந்தனக்கட்டை தேய்ந்துபோனாலும் மணம் குன்றாது ! 

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

---------------------------------------------------------------------------------------

பாடல் (28)

---------------------------------------------------------------------------------------

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்துங்

கந்தங் குறைபடா தாதலால் தந்தந்

தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர் கேட்டால்

மனஞ்சிறிய ராவரோ மற்று.

---------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்

கந்தம் குறைபடாது ஆதலால் தம் தம்

தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்

மனம் சிறியர் ஆவரோ மற்று.

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

மெல் சந்தனக் குறடு = மென்மையான சந்தனக் கட்டையானது ; தான் தேய்ந்த காலத்தும் = தான் தேய்ந்து போன காலத்திலும் ; கந்தம் குறைபடாது = மணம் குறையாது ; ஆதலால் = ஆதலினாலே ; தார் வேந்தர் = மாலை அணிந்த அரசர்கள் ; தம் தம் தனம் சிறியர் ஆயினும் = தங்கள் தங்கள் செல்வத்தில் குறைந்தவரானாலும் ; கேட்டால் = அவ்வறுமையினாலே ; மனம் சிறியர் ஆவரோ = மனம் சுருங்கினவர் ஆவரோ (ஆகார்).

-----------------------------------------------------------------------------------------

குறடு = மரத் துண்டு எனப் பொருள் 

கொள்ள வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

சந்தனக்கட்டையைக் கல்லில் தேய்த்துத் தேய்த்துச் சந்தனக் குழம்பு எடுப்பார்கள்; இறுதியில் அது தேய்ந்து மிக மெலிதாகிப் போகும்; அவ்வாறு தேய்ந்து  சிறுத்துப் போனாலும் கூட, சந்தனக்கட்டை  தன் இயல்பான மணத்தை மட்டும் இழப்பதில்லை !

அதுபோல, நாட்டில் மழை பொய்த்து, விளைச்சல் குறைந்து வறுமை  ஏற்பட்டுஆளும் அரசர்கள் தம் செல்வ வளத்தில் குறைந்து போனாலும், அவர்கள் தம் பரந்த பார்வையை  இழந்து மனம் சுருங்கிப் போவதில்லை ! செல்வத்தில் குறைந்தாலும் மனவிரிவு குன்றுவதில்லை !

----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

----------------------------------------------------------------------------------------

அரசர்கள் செல்வ வளத்தில் குறைய நேர்ந்தாலும், அவர்களது பரந்த மனம் சுருங்கிவிடாது !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}