(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 20 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (00) வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம் !

-------------------------------------------------------------------------------------

மூதுரை என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வம் அறுக்கும் செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி ஆகியவை இவர் இயற்றிய பிற நூல்கள். ஔவையார் என்னும் பெயரில் பல பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். மூதுரையை இயற்றிய ஔவையார் கி.பி. 9 –ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. அதனாலேயே இவர் பாடலில் வடமொழிச் சொற்கள் பல கலந்திருப்பதை ஆங்காங்கே காணலாம் ! மூதுரையில் மொத்தம் 30 செய்யுள்கள் இருக்கின்றன. முதல் செய்யுளான இறை வணக்கப் பாடல் இதோ :-

-------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (01)

----------------------------

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காதுபூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்

தப்பாமற் சார்வார் தமக்கு.

------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------

வாக்கு உண்டாம், நல்ல மனம் உண்டாம் மா மலராள்

நோக்கு உண்டாம், மேனி நுடங்காதுபூக் கொண்டு

துப்பு ஆர் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

--------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

சிவந்த திருமேனியை  உடைய வேழமுகக் கடவுளின் திருவடிகளை அன்றாடம் தொழுவோர் தமக்குச்  சிறந்த சொல்வளம் உண்டாகும் ! நல்ல சிந்தனை உண்டாகும் ! செல்வத் திருமகளாம் செந்தாமரைச் செல்வியில் அருட் பார்வை கிட்டும் ! இவையல்லாமல் நோய் நொடிகளும்  நெருங்கா  !  அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் நீடு வாழ்வார் !

-------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

துப்பு ஆர் = பவளம் போலும் (சிவப்பாகிய) ; திருமேனி = திருமேனியையும் ; தும்பிக்கையான் = துதிக்கை என்னும் கையை உடைய பிள்ளையாரின் ; பாதம் = திருவடிகளை ; பூக்கொண்டு = (வழிபாடு செய்ய) மலர் எடுத்துக்கொண்டு ; தப்பாமல் = நாள்தோறும் தவறாமல் ; சார்வார் தமக்கு = .அடைந்து பூசை செய்வோருக்கு ; வாக்கு உண்டாம் = சொல்வளம் உண்டாகும் ; நல்ல மனம் உண்டாம் = நல்ல சிந்தனை உண்டாகும் ; மாமலராள் = செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின் ; நோக்கு உண்டாம் = அருட்பார்வை உண்டாகும் ; மேனி = அவர் உடம்பு ; நுடங்காது = (பிணிகளால்) வாட்டமுறாது.

--------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

பிள்ளையாரைத் தொழுதால், அவருக்குச் சொல்வளம் உண்டாகும்; நல்ல சிந்தனை உண்டாகும் ; திருமகளின் அருட்பார்வை உண்டாகும், உடல் பிணியால் வாட்டமுறாது !

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ

[தி.:2052 ,சிலை (மார்கழி),05]

{20-12-2021}

--------------------------------------------------------------------------------------

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (01) நன்றி ஒருவற்குச் செய்தக்கால் !

நற்குணமுடைய ஒருவனுக்குநாம் செய்யும்  உதவி !

 ------------------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் ”மூதுரையும் ஒன்றுமுப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு “வாக்குண்டாம்” என்று இன்னொரு பெயருமுண்டு.

------------------------------------------------------------------------------------------------

பாடல்.01.

-----------------------------------------------------------------------------------------------

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா – நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்றரு தலால்.

--------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

--------------------------------------------------------------------------------------------------

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் என வேண்டா – நின்று

தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்.

--------------------------------------------------------------------------------------------------

நன்றி” என்னும் சொல்லுக்கு “நன்மை” என்று பொருள்இக்காலத்தில் ”நன்றி” என்னும் சொல் வேறு பொருளில்  கையாளப்படுகிறது !

---------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

நின்று = நிலைபெற்று ; தளரா = சோர்ந்து போகாமல் ; வளர் தெங்கு = வளர்கின்ற தென்னையானது ; தாள் உண்ட நீரை = தன் அடியால் (அடி மரத்தால்) உண்ட தண்ணீரை ; தலையாலே = தன் முடியாலே ( உச்சிப் பகுதியாகிய காய்கள் தோன்றும் பகுதியாலே) ; தான் தருதலால் = (சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால் ; ஒருவற்கு = (நற்குணமுள்ள) ஒருவனுக்கு ; நன்றி செய்தக்கால் = (நன்மை) உதவி செய்தால் ; அந்நன்றி = அவ்வுதவியை ; என்று தருங்கொல் = அவன் எப்பொழுது செய்வானோ ; என வேண்டா = என ஐயுற வேண்டியதில்லை.

--------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

நற்குணமுடைய ஒருவனுக்குநாம் ஓர் உதவி செய்தால்அவ்வுதவிக்குப் பதில் உதவியை அவன் எப்பொழுது நமக்குச் செய்வான் என்று ஐயுற  வேண்டாம்ஏனெனில்எப்படி ஒரு தென்னை மரமானதுதன் அடிப்பகுதியால் நிலத்திலிருந்து உறிஞ்சிய நீரைநுனிப் பகுதியால் சுவையுள்ள இளநீராக்கித் தானே தருகிறதோ, அவ்வாறே, அம்மனிதனும் தகுந்த நேர்த்தில் தானாக முன்வந்து நமக்குப் பதிலுதவியைக் கட்டாயம் செய்திடுவான் !

------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

பிறருக்கு நாம் செய்யும் உதவியைஎதையும் எதிர்பார்த்துச் செய்யக் கூடாதுநாம் செய்யும் உதவியால் உருவாகும் நற்பயன்நமக்கு உதவி தேவையுள்ள நேரத்தில் கட்டாயம் கிட்டும் என்பதே இப்பாடலின் கருத்துரை.

----------------------------------------------------------------------------------------------- 

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.: 2052 : சிலை (மார்கழி) 06)

{21-12-2021}

-----------------------------------------------------------------------------------------------

மூதுரை(வை.வேதரெத்தினம் உரை) (02) நல்லார் ஒருவர்க்கு செய்த !

சான்றோர்களுக்கு  நாம் செய்யும்  உதவி !

 ---------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு வாக்குண்டாம்என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------

பாடல் (02)

---------------------------------------------------------------------------------------

நல்ல ரொருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மே லெழுத்துப்போற் காணுமே அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார் கீந்த உபகாரம்

நீர்மே லெழுத்திற்கு நேர்.

--------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------------------------------------------

 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல் மேல் எழுத்துப் போல்  காணுமே அல்லாத

ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர் மேல் எழுத்திற்கு நேர்.

--------------------------------------------------------------------------------------

உபகாரம் என்னும் வடசொல்லுக்கு உதவி என்று தமிழில் பொருள்.

--------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

நல்லார் ஒருவர்க்கு = நற்குணம் உடைய ஒருவர்க்கு : செய்த உபகாரம் = செய்த உதவியானது ; கல் மேல் எழுத்துப் போல் = கருங்கல்லின் மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல ; காணும் = அழியாது விளங்கும் ; அல்லாத = நல்லவர் அல்லாத ; ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு = அன்பிலாத மனம் உடையார்க்கு ; ஈந்த உபகாரம் = செய்த உதவியானது ; நீர் மேல் எழுத்திற்கு = நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ; நேர் = ஒப்பாக (அழிந்துவிடும்).

-------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

நல்லியல்புகள் உடைய சான்றோர்களுக்கு நாம் செய்யும் உதவியை அவர்கள் எப்பொழுதும் மறக்கமாட்டார்கள் ! கருங்கல்லில் வெட்டப்பட்ட எழுத்துகளைப் போல அஃது என்றென்றும் அவர்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் ! ஆனால், நெஞ்சில் அன்பில்லாத கீழ்மை மனிதர்களுக்கு நாம்  செய்கின்ற உதவியை அவர்கள் அப்பொழுதே மறந்துவிடுவார்கள்; தண்ணீரின் மேல் எழுதும் எழுத்துகள் எப்படி அக்கணமே அழிந்து போகுமோ அவ்வாறே அவர்கள் நெஞ்சிலும் நன்றியுணர்வு துளிக்கூட நிலைபெறாமல் அப்பொழுதே அழிந்துபோகும் !

--------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

நல்லவருக்குச் செய்த உதவி என்றும் நிலைபெற்று விளங்கும்; தீயவருக்குச் செய்த உதவி. செய்த அப்பொழுதே அழிந்துவிடும்!

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 06)

{21-12-2021}

------------------------------------------------------------------------------------------

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (03) இன்னா இளமை வறுமை !

இளமையில் வறுமை கொடிது !

------------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு வாக்குண்டாம்என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல் (03)

------------------------------------------------------------------------------------------

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்

இன்னா அளவி லினியவும் இன்னாத

நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே

ஆளில்லா மங்கைக் கழகு.

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும் இன்னாத

நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே

ஆள் இல்லா மங்கைக்கு அழகு.

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------

இளமை (இன்பத்தைத் தரும்) இளமைப் பருவத்தில் ; வறுமை வந்து எய்தியக்கால் = வறுமை வந்து அடைந்தால் ; இன்னா = அது துன்பத்தைத் தருவதாகும் ; இன்னா அளவில் = துன்பத்தைத் தரும் முதுமைப் பருவத்தில் ; இனியவும் = இனியனவாகிய பொருள்களும் ; இன்னாத = துன்பத்தைத் தருவனவாம் ; (அவைகள்) நாள் அல்லா நாள் = (சூடுவதற்கு உரிய) காலமல்லாத காலத்தில் ; பூத்த நல் மலரும் = மலர்ந்த நல்ல மலரையும் ; ஆள் இல்லா மங்கைக்கு அழகும் = (அனுபவித்தற்குக்) கணவன் இல்லாத மங்கையின் அழகையும் ; போலும் = ஒக்கும்.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

--------------------------

வாழ்வில் இன்பமயமான பகுதியாகிய இளமைப் பருவத்தில் ஒருவன் எதையும் துய்க்க முடியாதபடி வறுமையின் பிடியில் அகப்படுவானாகில், அது மிகுந்த துன்பத்தைத் தருவதாகவே அமையும் !

அதுபோல், எதையும் துய்க்கமுடியாதபடி நலக்குறைவுக்கு ஆட்படும் முதுமைப் பருவத்தில், ஒருவனுக்குக் கிடைக்கும் இனிய உணவும் மிகுந்த செல்வமும் மிகுந்த  துன்பத்தைத் தருவதாகவே அமையும் !

இவையிரண்டும் எப்படி இருக்கின்றன என்றால் கூந்தலில் சூடுவதற்குரிய காலமல்லாக் காலத்தில் பூத்திருக்கும் நறுமணமும் நல்ல வண்ணமும் மிக்க மலருக்கு ஒப்பாக உள்ளன !

அஃதன்றியும், கண்ணாரக் கண்டுகளித்து மனதால் சுவைத்து இன்புறுவதற்குக் கணவன் இல்லாத பருவ மங்கையின் சுண்டியிழுக்கும் அழகுத் திருமேனிக்கு ஒப்பாகவும் இருக்கின்றன !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------

வறுமைக் காலத்து இளமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பனவாகும். 

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 05)

{20-12-2021}

------------------------------------------------------------------------------------------