(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

நஞ்சுடைமை தானறிந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நஞ்சுடைமை தானறிந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (25) நஞ்சுடைமை தானறிந்து நாகம் !

நஞ்சுடைய நாகப் பாம்பு புதருக்குள் மறைந்து வாழும் !

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

-----------------------------------------------------------------------------------------

பாடல்.(25)

-----------------------------------------------------------------------------------------

நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்

அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு நெஞ்சிற்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத் தவர் !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்

அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு _ நெஞ்சில்

கரவு உடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவு இலா நெஞ்சத்தவர் !

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

நாகம் = நஞ்சு உடைய நாகப் பாம்பானது ; தான் நஞ்சு உடைமை அறிந்து = தான் நஞ்சு உடையதாய் இருத்தலை அறிந்து ; கரந்து உறையும் = மறைந்து வழும் ; நீர்ப்பம்பு = (நஞ்சில்லாத) தண்ணீர்ப் பாம்பானது ; அஞ்சா புறம் கிடக்கும் = அச்சமின்றி வெளியே கிடக்கும் ; (அவை போல்) நெஞ்சில் கரவு உடையார் = மனத்தில் வஞ்சனையை உடையவர் ; தம்மைக் கரப்பர் = தம்மைத் தாமே மறைத்துக் கொள்வர் ; கரவு இலா நெஞ்சத்தவர் = வஞ்சனை இல்லாத மனத்தை உடையவர் ; கரவார் = தம்மை மறைத்துக் கொள்ளார்.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

தன்னிடம் நஞ்சு இருப்பதால், தன்னைக் கண்டால் மக்கள் அடித்துக் கொல்வர் என்று அஞ்சி நச்சுப் பற்களையுடைய நாகப் பாம்பு புதருக்குள் மறைந்து வாழும் !  அதைப்போல, நெஞ்சில் வஞ்சக எண்ணம் கொண்ட கீழோர், வெளிப்படையாகப் பழகாமல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு, பிறரிடமிருந்து ஒதுங்கி வாழ்வர் !

தன்னிடம் நச்சுப் பற்கள் இல்லை என்பதால், தன்னைக் கண்டால் மக்கள் அச்சம் கொண்டு அடித்துக் கொல்ல மாட்டார்கள் என்பதை உணர்ந்து  தண்ணீர்ப் பாம்பானது அஞ்சாமல் வெளியில் புழங்கும் ! அதைப்போல, நெஞ்சில் வஞ்சக எண்ணமில்லாத நல்லவர்கள், பிறரிடமிருந்து ஒதுங்காமல் ஒன்றியே வாழ்வார்கள் !

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

வஞ்சனை உடையவர் மறைந்து ஒழுகுவார் ; வஞ்சனை இல்லாதவர் வெளிப்பட்டு ஒழுகுவார் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2050 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

-----------------------------------------------------------------------------------------