சீதேவி அருளிருந்தால் அனைத்தும் கிடைக்கும் !
----------------------------------------------------------------------------------------
கி.பி.9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”மூதுரை”யைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில்
ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். 30 பாடல்களைக் கொண்ட இந்நூலில்
பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு
பாடல்:-
----------------------------------------------------------------------------------------
பாடல் (29)
------------------------------------------------------------------------------------------
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமு மெல்லாம் – திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து
போம்போ தவளோடும் போம் !
----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும்
நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் – திருமடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும் அவள்பிரிந்து
போம் போது அவளோடும் போம் !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
மருவு இனிய சுற்றமும் = தழுவிய இனிய உறவும் ;
வான் பொருளும் = மேலாகிய பொருளும் ; நல்ல உருவும் = நல்ல அழகும் ; உயர்
குலமும் எல்லாம் = உயர்வாகிய குலமும் என்னும் இவைகளெல்லாம் ;
திருமடந்தை ஆம் போது = சீதேவி வந்து
கூடும்போது ; அவளோடும் ஆகும் = அவளுடனே
வந்து கூடும் ; அவள் பிரிந்து போகும் போது = அவள் நீங்கிப் போம் பொழுது ; அவளோடு போம் = அவளுடனே நீங்கிப் போகும்.
----------------------------------------------------------------------------------------
நீதிக் கருத்துகள் பலவற்ற
எடுத்துரைத்த ஔவையார், அந்தத் தடத்திலிருந்து விலகி, ஆன்மிகத்துள் புகுவது -
இப்பாடல் ஔவையார் இயற்றியது அல்லவோ என்னும் ஐயத்தை உருவாக்குகிறது !
----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------------------------------------------------------------------------
சீதேவி என்னும் செல்வத் திருமகள் ஒரு
இல்லத்தில் குடியிருக்கத் தொடங்கும் போது,
இனிய உறவுகள் கூடும்; மதிப்பு மிக்க செல்வங்கள்
சேரும்; நல்ல மேனியழகு உண்டாகும்; பிறந்த குடியின் பெருமை பெருகும் !
அவள் வெறுப்புற்று விலகிச் சென்றால், கிடைத்தவை
அனைத்தும் அவளோடு சேர்ந்து போய்விடும் ! உறவும், செல்வமும், அழகும், குடிப்
பெருமையும் என்றுமே நிலையில்லாதவை !
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
சுற்றமும், பொருளும், அழகும், உயர் குலமும் நிலையுடையனவல்ல !
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”மூதுரை” வலைப்பூ,
[தி.ஆ:2052: சிலை (மார்கழி) 03]
{18-12-2021}
----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக