திங்கள், 20 டிசம்பர், 2021

மூதுரை(வை.வேதரெத்தினம் உரை) (02) நல்லார் ஒருவர்க்கு செய்த !

சான்றோர்களுக்கு  நாம் செய்யும்  உதவி !

 ---------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு வாக்குண்டாம்என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------

பாடல் (02)

---------------------------------------------------------------------------------------

நல்ல ரொருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மே லெழுத்துப்போற் காணுமே அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார் கீந்த உபகாரம்

நீர்மே லெழுத்திற்கு நேர்.

--------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------------------------------------------

 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல் மேல் எழுத்துப் போல்  காணுமே அல்லாத

ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர் மேல் எழுத்திற்கு நேர்.

--------------------------------------------------------------------------------------

உபகாரம் என்னும் வடசொல்லுக்கு உதவி என்று தமிழில் பொருள்.

--------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

நல்லார் ஒருவர்க்கு = நற்குணம் உடைய ஒருவர்க்கு : செய்த உபகாரம் = செய்த உதவியானது ; கல் மேல் எழுத்துப் போல் = கருங்கல்லின் மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல ; காணும் = அழியாது விளங்கும் ; அல்லாத = நல்லவர் அல்லாத ; ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு = அன்பிலாத மனம் உடையார்க்கு ; ஈந்த உபகாரம் = செய்த உதவியானது ; நீர் மேல் எழுத்திற்கு = நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ; நேர் = ஒப்பாக (அழிந்துவிடும்).

-------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

நல்லியல்புகள் உடைய சான்றோர்களுக்கு நாம் செய்யும் உதவியை அவர்கள் எப்பொழுதும் மறக்கமாட்டார்கள் ! கருங்கல்லில் வெட்டப்பட்ட எழுத்துகளைப் போல அஃது என்றென்றும் அவர்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் ! ஆனால், நெஞ்சில் அன்பில்லாத கீழ்மை மனிதர்களுக்கு நாம்  செய்கின்ற உதவியை அவர்கள் அப்பொழுதே மறந்துவிடுவார்கள்; தண்ணீரின் மேல் எழுதும் எழுத்துகள் எப்படி அக்கணமே அழிந்து போகுமோ அவ்வாறே அவர்கள் நெஞ்சிலும் நன்றியுணர்வு துளிக்கூட நிலைபெறாமல் அப்பொழுதே அழிந்துபோகும் !

--------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

நல்லவருக்குச் செய்த உதவி என்றும் நிலைபெற்று விளங்கும்; தீயவருக்குச் செய்த உதவி. செய்த அப்பொழுதே அழிந்துவிடும்!

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 06)

{21-12-2021}

------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக