நல்ல மனைவி அமைந்தால் இல்லறம் இனிதே !
-----------------------------------------------------------------------------------------
கி.பி.9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”மூதுரை”யைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில்
ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். 30 பாடல்களைக் கொண்ட இந்நூலில்
பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு
பாடல்:-
-----------------------------------------------------------------------------------------
பாடல்.(21)
----------------------------------------------------------------------------------------
இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும் !
----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது
ஒன்றில்லை
இல்லாளும் இல்லாலே ஆம் ஆயின் – இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்
இல்
புலி கிடந்த தூறு ஆய்விடும் !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
இல்லாள் அகத்து இருக்க = (நற்குண நற்செய்கைகளை
உடைய) மனையாள் வீட்டில் இருக்கின் ; இல்லாதது
ஒன்றுமில்லை = (அவ்வீட்டில்) இல்லாத
பொருள் ஒன்றுமில்லை ; இல்லாளும் இல்லாளே ஆயின் = மனையாள் இல்லாமற் போயினும் ; இல்லாள் வலிகிடந்த
மாற்றம் உரைக்குமேல் = மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச்
சொல்லினும்; அவ் வில் புலி கிடந்த தூறு ஆய்விடும் = அவ் வீடு புலி தங்கிய புதர் போல் ஆய்விடும்.
----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------------------------------------------------------------------------
நற்குணமும் நற்செய்கைகளும் உடைய நங்கை மனையாளாக அமைந்துவிட்டால், அந்த இல்லத்தில் சுற்றமும் நட்பும் சூழ்ந்து உறவாட, என்றும் இனிமை தவழ்ந்திருக்கும்; அந்த இல்லத்தில் இல்லாத செல்வம் (பொருள்) என்று ஏதுமிருக்காது !
ஆனால், மனையாள் இல்லாமற் போனாலும், மனையாள் இருந்து அவள் பேச்சிலும்
செயலிலும் தீக் கங்குகளைப் போல் வெப்பத்தின் வீச்சு தகித்துக் கொண்டிருந்தாலும்,
அந்த வீடானது உற்றார் உறவினர் யாரும் அண்ட முடியாத புலி தங்கிய
புதர் போல ஆகிவிடும் !
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருள்களும் நிறைந்த வீடு ! அஃதல்லா வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடேயாகும் !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"மூதுரை” வலைப்பூ,
[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]
{18-12-2021}