விண்டு உமி போனால் முளையாது !
----------------------------------------------------------------------------------------
தமிழ்
மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் ”மூதுரை”யும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட
இந்நூலுக்கு “வாக்குண்டாம்”
என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து
உங்களுக்காக ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------
பாடல் (11)
-----------------------------------------------------------------------------------------
பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம் – கொண்டபேர்
ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல் !
------------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்
-----------------------------------------------------------------------------------------
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமி போனால் முளையாது – கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல் !
----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
----------------------------------------
பண்டு
முளைப்பது = (உமி நீங்குதற்கு) முன்னே முளைப்பது ; அரிசியே ஆனாலும் = அரிசியே யாயினும் ; உமி விண்டு போனால் = உமி நீங்கிப் போனால் ; முளையாது = (அவ்வரிசி முளைக்காது ; (அதுபோல) கொண்ட = பெற்ற ;
பேர் ஆற்றல் உடையார்க்கும் = பெரிய வல்லமை
உடையவருக்கும் ; அளவு இன்றி = துணை வலி
இல்லாமல் ; ஏற்ற கருமம் = எடுத்துக்
கொண்ட காரியத்தை ; செயல் ஆகாது = செய்து
முடித்தல் இயலாது.
----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-------------------------
தன்னைச் சுற்றி மூடியிருக்கும் உமி நீங்குவதற்கு
முன்பாகவே அரிசியிலிருந்து முளை அரும்பிவிடுகிறது; இருந்தாலும்
அந்த உமி நீங்கிவிட்டால் அரிசி ஒருபோதும் முளைவிட முடியாது ! அதைப்போல
அனைத்து வல்லமையும் படைத்த மனிதனாக இருந்தாலும்கூட, தான்
தொடங்கிய செயலை முடிப்பதற்கு துணைவர்களின்
வலிமை கண்டிப்பாகத் தேவை ! துணைவலி இல்லாமல் எந்தச் செயலையும் யாரும் முடித்திட
முடியாது !
----------------------------------------------------------------------------------------
கருத்துச்
சுருக்கம்:
-------------------------------------
மிக்க
வல்லமை உடையவர்க்கும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க, துணை வலி வேண்டும் !
----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
மூதுரை
வலைப்பூ.
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 04]
{19-12-2021}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக