மேன்மக்களின் குணம் என்றும் மாறுவதில்லை !
--------------------------------------------------------------------------------------
கி.பி.9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”மூதுரை”யைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில்
ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். 30 பாடல்களைக் கொண்ட இந்நூலில்
பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு
பாடல்:-
--------------------------------------------------------------------------------------
பாடல்.18.
--------------------------------------------------------------------------------------
சீரியர் கெட்டாலும் சீரியரே
சீரியர்மற்
றல்லாதார் கெட்டாலங் கென்னாகும் – சீரிய
பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு
மென்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்
--------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
--------------------------------------------------------------------------------------
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்; -சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்
என்ன ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்.
--------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------
சீரியர் கெட்டாலும் = மேன்மக்கள்
வறுமையுற்றாலும் ; சீரியரே = மேன்மைக்
குணமுடையோரேயாவர் ; சீரியர் அல்லாதார் கெட்டால் = கீழ் மக்கள் வறுமையுற்றால் ; அங்கு என் ஆகும் =
அப்பொழுது அவர் குணம் யாதாகும் ; சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் = சிறந்த பொன்னாலாகிய குடம்
உடைந்தாலும் ; பொன் ஆகும் = பழைய
பொன்னேயாகிப் பயன் தரும் ; மண்ணின் குடம் உடைந்தக்கால் =
மண்ணாலாகிய குடம் உடைந்தால் ; என் ஆகும் =
அது யாது பயன் உடையதாகும்.
--------------------------------------------------------------------------------------
பொருளுரை:
------------------------
பொன்னாலாகிய குடம் உடைந்து போனால் அதை
உருக்கி வேறு பொருள்களைச் செய்து கொள்ளலாம்;
உடைந்து போனமையால் பொன்னின் மதிப்புக் குறைந்து போவதில்லை !
ஆனால், மண்ணாலான குடம் உடைந்து போனால், அது வேறு எதற்கும் பயன்படாது. உடைந்து போன பின்பு
மண்குடத்திற்கு மதிப்புத் துளியளவும் இருப்பதில்லை !
அதுபோல், குணத்தாலும்
செயலாலும் மேன்மக்களாக் திகழ்வோர், வறுமை வந்து நலிவடைந்து
போனாலும், அவர்களின் மேன்மைக் குணம் மாறுவதில்லை ! அவர்கள் மதிப்பும் குறைவதில்லை !
ஆனால், குணத்தால் கீழ்மக்களாகத் திகழ்வோர், வறுமையுற்று நலிவடைந்து போனால், கீழ்மைக் குணம்
உடையவர்களாகவே வாழ்ந்து, மதிப்பிழந்த உடைந்த மண்குடமாகவே
இலங்குவர் !
--------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
----------------------------------
மேலோர் வறுமையுற்றாலும் மேன்மை
குன்றார்; கீழோர் வறுமையுற்றால்
சிறிதும் மேன்மையிலர் ஆவர்.
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"மூதுரை” வலைப்பூ,
[தி.ஆ:2052, சிலை (மார்கழி) ,04]
{19-12-2021}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக