(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (18) சீரியர் கெட்டாலும் சீரியரே !

மேன்மக்களின் குணம் என்றும் மாறுவதில்லை !

--------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

--------------------------------------------------------------------------------------

பாடல்.18.

--------------------------------------------------------------------------------------

சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்

றல்லாதார் கெட்டாலங் கென்னாகும் சீரிய

பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு மென்னாகும்

மண்ணின் குடமுடைந்தக் கால்

--------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------------------------------------------

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று

அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்; -சீரிய

பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் என்ன ஆகும்

மண்ணின் குடம் உடைந்தக் கால்.

--------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

சீரியர் கெட்டாலும் = மேன்மக்கள் வறுமையுற்றாலும் ; சீரியரே = மேன்மைக் குணமுடையோரேயாவர் ; சீரியர் அல்லாதார் கெட்டால் = கீழ் மக்கள் வறுமையுற்றால் ; அங்கு என் ஆகும் = அப்பொழுது அவர் குணம் யாதாகும் ; சீரிய பொன்னின் குடம் உடைந்தால் = சிறந்த பொன்னாலாகிய குடம் உடைந்தாலும் ; பொன் ஆகும் = பழைய பொன்னேயாகிப் பயன் தரும் ; மண்ணின் குடம் உடைந்தக்கால் = மண்ணாலாகிய குடம் உடைந்தால் ; என் ஆகும் = அது யாது பயன் உடையதாகும்.

--------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------

பொன்னாலாகிய குடம் உடைந்து போனால் அதை உருக்கி வேறு பொருள்களைச் செய்து கொள்ளலாம்; உடைந்து போனமையால் பொன்னின் மதிப்புக் குறைந்து போவதில்லை !

ஆனால், மண்ணாலான குடம் உடைந்து போனால், அது வேறு எதற்கும் பயன்படாது. உடைந்து போன பின்பு மண்குடத்திற்கு மதிப்புத் துளியளவும் இருப்பதில்லை !

அதுபோல், குணத்தாலும் செயலாலும் மேன்மக்களாக் திகழ்வோர், வறுமை வந்து நலிவடைந்து போனாலும், அவர்களின் மேன்மைக் குணம் மாறுவதில்லை ! அவர்கள் மதிப்பும் குறைவதில்லை !

ஆனால், குணத்தால் கீழ்மக்களாகத் திகழ்வோர், வறுமையுற்று நலிவடைந்து போனால், கீழ்மைக் குணம் உடையவர்களாகவே வாழ்ந்து, மதிப்பிழந்த உடைந்த மண்குடமாகவே இலங்குவர் !

--------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

----------------------------------

மேலோர் வறுமையுற்றாலும் மேன்மை குன்றார்; கீழோர் வறுமையுற்றால் சிறிதும் மேன்மையிலர் ஆவர்.

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052, சிலை (மார்கழி) ,04]

{19-12-2021}

--------------------------------------------------------------------------------------