(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 20 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (03) இன்னா இளமை வறுமை !

இளமையில் வறுமை கொடிது !

------------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு வாக்குண்டாம்என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல் (03)

------------------------------------------------------------------------------------------

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்

இன்னா அளவி லினியவும் இன்னாத

நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே

ஆளில்லா மங்கைக் கழகு.

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும் இன்னாத

நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே

ஆள் இல்லா மங்கைக்கு அழகு.

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------

இளமை (இன்பத்தைத் தரும்) இளமைப் பருவத்தில் ; வறுமை வந்து எய்தியக்கால் = வறுமை வந்து அடைந்தால் ; இன்னா = அது துன்பத்தைத் தருவதாகும் ; இன்னா அளவில் = துன்பத்தைத் தரும் முதுமைப் பருவத்தில் ; இனியவும் = இனியனவாகிய பொருள்களும் ; இன்னாத = துன்பத்தைத் தருவனவாம் ; (அவைகள்) நாள் அல்லா நாள் = (சூடுவதற்கு உரிய) காலமல்லாத காலத்தில் ; பூத்த நல் மலரும் = மலர்ந்த நல்ல மலரையும் ; ஆள் இல்லா மங்கைக்கு அழகும் = (அனுபவித்தற்குக்) கணவன் இல்லாத மங்கையின் அழகையும் ; போலும் = ஒக்கும்.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

--------------------------

வாழ்வில் இன்பமயமான பகுதியாகிய இளமைப் பருவத்தில் ஒருவன் எதையும் துய்க்க முடியாதபடி வறுமையின் பிடியில் அகப்படுவானாகில், அது மிகுந்த துன்பத்தைத் தருவதாகவே அமையும் !

அதுபோல், எதையும் துய்க்கமுடியாதபடி நலக்குறைவுக்கு ஆட்படும் முதுமைப் பருவத்தில், ஒருவனுக்குக் கிடைக்கும் இனிய உணவும் மிகுந்த செல்வமும் மிகுந்த  துன்பத்தைத் தருவதாகவே அமையும் !

இவையிரண்டும் எப்படி இருக்கின்றன என்றால் கூந்தலில் சூடுவதற்குரிய காலமல்லாக் காலத்தில் பூத்திருக்கும் நறுமணமும் நல்ல வண்ணமும் மிக்க மலருக்கு ஒப்பாக உள்ளன !

அஃதன்றியும், கண்ணாரக் கண்டுகளித்து மனதால் சுவைத்து இன்புறுவதற்குக் கணவன் இல்லாத பருவ மங்கையின் சுண்டியிழுக்கும் அழகுத் திருமேனிக்கு ஒப்பாகவும் இருக்கின்றன !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------

வறுமைக் காலத்து இளமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பனவாகும். 

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 05)

{20-12-2021}

------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக