(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (19) ஆழ அமுக்கி முகக்கினும் !

கடல் நீரை  அமிழ்த்தி  அமிழ்த்தி  மொண்டாலும் !

------------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

------------------------------------------------------------------------------------------

பாடல்.19.

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால்நாழி தோழி

நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்

விதியின் பயனே பயன் !

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ் கடல்நீர்

நாழி முகவாது நால் நாழி தோழி

நிதியும் கணவனும் நேர்படினும் தந்தம்

விதியின் பயனே பயன் !

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

ஆழ்கடல் நீர் = ஆழமாகிய  கடலின் நீரை ; ஆழ அமுக்கி முகக்கினும் = அழுந்தும்படியாக அமிழ்த்தி மொண்டாலும் ; நாழி = ஒரு படியானது ; நால் நாழி முகவாது = நன்கு படி நீரை மொள்ளாது ; (அது போல்) தோழி = தோழியே ; நிதியும் கணவனும் = (பெண்டிர்க்கு) மிக்க பொருளும் தக்க கணவனும் கிடைத்தாலும் ; தம் தம் = அவரவருடைய ; விதியின் பயனே பயன் = இயன்ற அளவாகிய பயனே (அநுபவிக்கப்படும் ) பயனாகும்.

------------------------------------------------------------------------------------------

நாழி = இப்போது வழக்கிலுள்ள இலிட்டர் (LITRE) 

படியைப்போல அக்காலத்தில் வழக்கில் இருந்த 

படிக்குப் பெயர் நாழி என்பதாகும்.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

கடல் நீரை எத்துணை தான் அமிழ்த்தி  அமிழ்த்தி  மொண்டாலும் ஒரு படியானது தனக்குள் ஒரே நேரத்தில் நான்கு படி நீரை மொள்ள முடியாது ! (ஒரு படி நீரைத் தான் ஒரு நேரத்தில் மொள்ள முடியும்)

அதுபோல். ஒரு பெண்ணுக்கு நிறைந்த செல்வமும், நிகரற்ற கணவனும் வாய்த்திருந்தாலும், எத்துணை இயலுமோ அத்துணை அளவின்றி அதைவிட அதிகமாக அவளால் துய்க்க (அநுபவிக்க) முடியாது !

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

வேண்டும் பொருளெல்லாம் கிடைத்திருந்தாலும், அளவோடுதான் துய்க்க முடியும்; அளவின்றி மிகுதியாய் அநுபவிக்க முடியாது !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052, சிலை (மார்கழி),04]

{19-12-2021}