(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 20 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (06) உற்ற இடத்தில் உயிர் வழங்கும் !

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் !

 -----------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு வாக்குண்டாம்என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல் (06)

------------------------------------------------------------------------------------------

உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ கற்றூண்

பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான்.

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

----------------------------------------------------------------------------------------

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ கல் தூண்

பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான்.

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

கல் தூண் = கருங்கல் கம்பமானது ; பெரும் பாரம் தாங்கின் = பெரிய பாரத்தைச் சுமந்தால் ; பிளந்து இறுவது அல்லால் = பிளந்து முறிவது அல்லாமல் ; தான் தளர்ந்து வளையுமோ = தான் தளர்வுற்று வளையுமோ (வளையாது ; அதுபோல), உற்ற இடத்தில் = மானக்கேடு உண்டானவிடத்தில் ; உயிர் வழங்கும் தன்மையோர் = தம் உயிரை விடும் குணமுடையோர் ; பற்றலரை = பகைவரை ; கண்டால் = பார்த்தால் ; பணிவரோ = வணங்குவரோ ? (வணங்கார் !)

---------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

கருங்கல்லால் ஆன கம்பம் அளவு கடந்து பாரம் ஏற்றினால் துளியும் வளைந்து கொடுக்காது; மாறாக பிளந்து முறிந்துவிடும் !

அதுபோல, மானக்கேடு ஏற்பட்டால்  உயிரையே விடுவிடத் துணியும் சான்றோர்கள், பகைவர்களுக்கு வளைந்து கொடுத்துத் தலை தாழ்ந்து செல்ல மாட்டார்கள்; மாறாக மானத்துடன்  தலை  நிமிர்ந்து   செல்வார்கள் !

--------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

மானமுடையவர் இடர் வரும் போது உயிரை விட்டாலும் விடுவார்களேயன்றி மானத்தை விட்டு வாழமாட்டார் ! !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 05)

{20-12-2021}

---------------------------------------------------------------------------------------