(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 20 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (10) நெல்லுக்கு இரைத்த நீர் !

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி !

---------------------------------------------------------------------------------------

முப்பது பாடல்களைக் கொண்ட “மூதுரை” எளிய சொற்களால் இயற்றப்பட்ட நீதி நூல். ஔவையார்   அருளிச் செய்த இந்நூல் அருமையான கருத்துக் கருவூலம். இதிலிருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------

பாடல்.10.

---------------------------------------------------------------------------------------

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -  தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி

புல்லுக்கும் ஆங்கே பொசியும் ஆம் தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை !

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------

நெலுக்கு = நெற் பயிருக்கு ; இறைத்த நீர் = இறைக்கப்பட்ட தண்ணீரானது ; வாய்க்கால் வழியோடி = கால்வாய் வழியாகச் சென்று ; ஆங்கு= அவ்விடத்திலுள்ள ; புல்லுக்கும் பொசியும் = புற்களுக்கும் கசிந்து ஊறும் ; (அது போல) தொல் உலகில் = பழமை வாய்ந்த இந்த உலகத்தில் ; நல்லார் ஒருவர் உளரேல் = நல்லவர் ஒருவர் இருப்பாராயின் ; அவர் பொருட்டு = அவர் நிமித்தமாக ; எல்லார்க்கும் மழை பெய்யும் = அனைவர்க்கும் மழை பெய்திடும் !

---------------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------------

நெற்பயிருக்கு இறைக்கப் பட்ட தண்ணீரானது கால்வாய் வழியாக ஓடும்போது, கால்வாய்க் கரையில் உள்ள புற்களுக்கும் பயன்படுகிறது. அதுபோல இவ்வுலகில் குணத்தாலும், கொடைத் தன்மையாலும் சிறந்து விளங்கும் நல்லவர் ஒரேயொருவர்  இருந்தால் கூட , அவர் நிமித்தமாக  அனைவர்க்கும் மழை பெய்து உலகம் செழிக்க உதவும் !

--------------------------------------------------------------------------------------

தீவினையாளர்கள் பெருகி வரும் இந்த நாட்டில் இன்னும் மழை பெய்கிறதே எனச் சிலருக்கு வியப்பாக இருக்கும். அதற்குத்தான் ஔவையார்  விடை கூறுகிறார் இந்தப் பாடல் மூலம். நல்லவர் ஒரே ஒருவர் இருந்தாலும், அந்த நாட்டில் அவருக்காக ஓரளவு மழை பெய்யவே செய்யும். அந்த நல்லவரும் மறைந்துவிட்டால், மழை முற்றாகப் பொய்த்துப் போய்விடும் !

நல்லவர் எண்ணிக்கை பெருகப் பெருக, வன வளம் பெருகும். தீவினையாளர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக வனவளம் துப்புரவாக அழிக்கப்பட்டு விடும். வனவளம் அழிந்து போனால் மழைவளமும் மறைந்து போகும் என்பதே இப்பாடல் நமக்கு உணர்த்தும் கருத்து !

--------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

பொசியும்
 = கசிந்து ஊட்டும்.; தொல் உலகில் = உருவாகிப் பலகோடி ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த உலகத்தில் ;

---------------------------------------------------------------------------------------

கலைச்சொற்கள்:

பொசி = PERCOLATE

வாய்க்கால்= CHANNEL

 ----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

 [தி.:2050, மடங்கல் (ஆவணி)14,]

{31-08-2019}

----------------------------------------------------------------------------------------