(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 18 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (27) கல்லாத மாந்தர்க்கு !

கல்வியறிவு இல்லாத மாக்களுக்கு கற்றவர் சொல் கூற்றம் !

------------------------------------------------------------------------------------------

கூற்றங்கள் பலவகை உள. அவற்றுள் நான்கு கூற்றங்கள் பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார் ஔவையார் ! அவர் இயற்றிய மூதுரையிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக !

-----------------------------------------------------------------------------------------

பாடல்.(27)

------------------------------------------------------------------------------------------

 கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்

அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் – மெல்லிய

வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே

இல்லிற் கிசைந்தொழுகாப் பெண் !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

கல்லாத மாந்தர்க்கு கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்

அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் மெல்லிய

வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே

இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் !

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

கல்லாத மாந்தர்க்கு = கல்வியறிவு இல்லாத மாக்களுக்கு ; கற்று உணர்ந்தார் சொல் = கற்று அறிந்தவருடைய உறுதிமொழி ; கூற்றம் = துன்பத்தைத் தருவதாம் ; அல்லாத மாந்தர்க்கு = (அறத்தில் நாட்டம் உடையர்) அல்லாத மனிதர்க்கு ; அறம் = அறத் தன்மையே அழிவைத் தருவதாம் ; மெல்லிய வாழைக்கு = மெல்லிய இலையுடைய வாழை மரத்துக்கு ; தான் ஈன்ற காய் கூற்றம் = அஃது ஈன்ற காயே அழிவைத் தருவதாம் ; (அதுபோல) இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் = இல்வாழ்க்கைக்குப் பொருந்தி நடவாத மனைவி ; கூற்றம் (கணவனுக்கு) அழிவைத் தருவளாம்.

------------------------------------------------------------------------------------------

கூற்றம்

துன்பம் தரும் நிகழ்வு 

எனப் பொருள் கொள்ள வேண்டும்.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

கற்றறிந்த அறிஞர்களின் சொற்கள் உண்மைகளையே எதிரொளிக்கும் என்பதால் கல்லாத மாந்தர்களின் மனத்துக்கு அவை ஏற்புடையவையாக இரா; எனவே அவை அவர்களுக்குத் துன்பம் அளிப்பதாகவே இருக்கும் !

அறவழிகளில் நாட்டம் கொள்ளாமல் மற வழிகளைத் தேர்வு செய்து ஒழுகிவரும் மூட மாந்தர்களுக்கு, பிறர் செய்யும் அறச் செயல்கள் அவர்கள் மனத்துக்குத் துன்பம் தருவதாகவே அமையும் !

உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் மாந்தர்களுக்கு நலந்தரும் மூலிகைகளாகவே திகழ்ந்தாலும்,  வாழை மரத்துக்கு அது ஈன்ற காய்களே  துன்பமான முடிவைத் தருவதாக அமையும் !

இல்லற வாழ்வில் கணவனுடன் ஒத்துப் போகாமல் தனக்கெனத் தனி வழி கண்டு அதில்  தடம் பதிக்க முயலும்  பொருத்தமில்லாத மனையாளே கணவனுக்குத் துன்பம் தரும் காரணியாக  அமைந்திடுவாள் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

கற்று அறிந்தவருடைய  உறுதிமொழியினாலே கல்லாதவருக்கும், தருமத்தினாலே பாவிகளுக்கும், பொருத்தமில்லாத மனையாளினாலே கணவனுக்கும் துன்பம் விளையும்.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை”வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக